பிரதமர் அலுவலகம்
'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
தில்லியில் நடைபெறும் ஒடிசா பர்பா விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், நாட்டின் வளர்ச்சியில் ஒடிசா முக்கிய பங்கு வகிப்பதுடன் உலகளவில் போற்றப்படும் கலாச்சார பாரம்பரியத்தால் பெருமை பெற்றுள்ளது: பிரதமர்
ஒடிசா மாநிலத்தின் கலாச்சாரம் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்துவதாக உள்ளது, இதில் ஒடிசாவின் மகன்களும் மகள்களும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்: பிரதமர்
நாட்டின் கலாச்சார வளத்திற்கு ஒரிய இலக்கியத்தின் பங்களிப்புக்கு பல உதாரணங்களை நாம் காண முடியும்: பிரதமர்
ஒடிசாவின் கலாச்சார வளம், கட்டிடக்கலை, அறிவியல் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. இதன் ஒவ்வொரு அடையாளத்தையும் உலகிற்கு எடுத்துச் செல்ல நாம் தொடர்ந்து புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமர்
ஒடிசா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்துத் துறையிலும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். துறைமுகம் சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன: பிரதமர்
எஃகு, அலுமினியம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒடிசா இந்தியாவின் சுரங்கமாக உள்ளது: பிரதமர்
ஒடிசாவில் எளிதாக வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்
இன்று ஒடிசா மாநிலத்தில் சொந்த தொலைநோக்குப் பார்வையின் திட்டங்களும் முதலீடுகளை ஈர்ப்பதுடன் , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவிடுகிறது: பிரதமர்
Posted On:
24 NOV 2024 8:23PM by PIB Chennai
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசாவின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு ஸ்வபவ் கவி கங்காதர் மெஹரின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பக்த தாசியா பவுரி, பக்த சாலபேகா மற்றும் ஒரிய பாகவத எழுத்தாளர் திரு. ஜகந்நாத் தாஸ் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
"ஒடிசா எப்போதும் துறவிகள் மற்றும் அறிஞர்களின் உறைவிடமாக இருந்து வருகிறது" என்று திரு மோடி கூறினார். சாரல் மகாபாரதம், ஒடியா பாகவதம் போன்ற மகத்தான இலக்கியங்கள் சாமானிய மக்களை சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் கலாச்சார வளத்தை மேம்படுத்துவதில் துறவிகளும் அறிஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். ஒரிய மொழியில் மகாபிரபு ஜகந்நாதர் தொடர்பான விரிவான இலக்கியங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். மஹாபிரபு ஜகந்நாதரின் சரித்திரத்தை நினைவு கூர்ந்த பிரதமர், ஜகந்நாதர் போரை முன்னின்று வழிநடத்தியதையும், போர்க்களத்தில் மணிகா கௌடினி என்ற பக்தரின் கையிலிருந்து தயிரை உட்கொண்டதையும் எடுத்துரைத்து இறைவனின் எளிமையைப் பாராட்டினார். இந்த கதையில் ஏராளமான படிப்பினைகள் உள்ளன என்று கூறிய திரு மோடி, நாம் நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால், கடவுளே அந்தப் பணியை வழிநடத்துகிறார் என்பது முக்கியமான பாடங்களில் ஒன்று என்று கூறினார். கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்றும், எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் நாம் தனியாக இருப்பதாக ஒருபோதும் உணரக்கூடாது என்றும் அவர் கூறினார்.
ஒடிசா கவிஞர் பீம் போய் எழுதிய ஒரு வரியை வாசித்த பிரதமர், ஒருவர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், உலகமே பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பூரி நகரம் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்தியது என்று திரு மோடி குறிப்பிட்டார். ஒடிசாவின் துணிச்சலான புதல்வர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டிற்கு முன்னோடியாக இருந்தனர் என்று அவர் கூறினார். பைக்கா கிராந்தி தியாகிகளின் கடனை நம்மால் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், பைக்கா கிராந்தி குறித்த நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிடும் வாய்ப்பு மத்திய அரசுக்கு கிடைத்த நல்வாய்ப்பு என்று திரு மோடி கூறினார்.
இந்த நேரத்தில் உத்கல் கேசரி ஹரே கிருஷ்ணா மெஹ்தாப் அவர்களின் 125வது பிறந்த நாளை அரசு பெரிய அளவில் கொண்டாடி வருவதாகக் கூறினார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தற்போது நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பதாகவும், இது நம் அனைவருக்கும் மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றும் கூறினார். பழங்குடியினர் நலனுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்தத் திட்டங்கள் ஒடிசாவில் உள்ள பழங்குடியின சமுதாயத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பயனளிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
ஒடிசா பெண் சக்தியின் பூமி என்றும், மாதா சுபத்ரா வடிவில் அதன் வலிமையை அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், பெண்களின் முன்னேற்றம் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்காக சுபத்ரா திட்டத்தை தொடங்கி வைக்கும் சிறந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், இது ஒடிசா பெண்களுக்கு பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் கடல்சார் சக்திக்கு புதிய பரிமாணத்தை அளிப்பதில் ஒடிசாவின் பங்களிப்பு குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். ஒடிசாவில் நேற்று பாலி ஜாத்ரா நிகழ்ச்சி நிறைவடைந்ததாகவும், கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று கட்டாக் மகாநதிக் கரையில் இந்த நிகழ்வு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பாலி ஜாத்ரா நாட்டின் கடல்சார் சக்தியின் சின்னமாக திகழ்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். கடந்த கால மாலுமிகளின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், இன்று போல் நவீன தொழில்நுட்பம் இல்லாத போதிலும், அவர்கள் கடல்களைக் கடந்து செல்லும் துணிச்சலுடன் இருந்தனர் என்று கூறினார். இந்தோனேசியாவின் பாலி, சுமத்ரா, ஜாவா போன்ற பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவதற்காக கப்பல்களில் பயணம் செய்தனர், இது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு இடங்களுக்கு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவியது என்று அவர் கூறினார். இன்று வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை அடைவதில் ஒடிசாவின் கடல்சார் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்று திரு மோடி வலியுறுத்தினார்.
***
(Release ID: 2076674)
VS/KR
(Release ID: 2078314)
Visitor Counter : 47
Read this release in:
Odia
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam