மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
டாக்டர் வர்கீஸ் குரியனின் வெற்றிக் கதையை கௌரவிக்கும் வகையில் புதுதில்லியில் நாளை தேசிய பால் தினம் -2024 கொண்டாட்டங்கள்
Posted On:
25 NOV 2024 12:20PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2024, நவம்பர் 26 அன்று புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் "தேசிய பால் தினத்தை" கொண்டாடுகிறது. "இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை" என்று அன்புடன் நினைவுகூரப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் 103 வது பிறந்த நாளை இந்த நிகழ்வு கௌரவிக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு பால்வளத் துறையின் முக்கிய பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இத்துறையின் இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு பசு / எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணை விவசாயி, சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர், சிறந்த பால் கூட்டுறவு சங்கம் / பால் உற்பத்தியாளர் நிறுவனம் / பால் உற்பத்தியாளர் அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் கால்நடை மற்றும் பால்வளத் துறையில் மிக உயர்ந்த தேசிய விருதுகளில் ஒன்றான தேசிய கோபால் ரத்னா விருதுகளை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வழங்குவார். ஒவ்வொரு பிரிவிலும் புதிதாக சேர்க்கப்பட்ட சிறப்பு விருதுகள் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்காக வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது, விருது பெற்ற சிலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்வில் இரண்டு குறிப்பிடத்தக்க பிரசுரங்கள் வெளியிடப்படும். முதலாவது அடிப்படை கால்நடை வளர்ப்பு புள்ளிவிவரம் -2023, இது கால்நடை மற்றும் பால்வளத்துறை போக்குகள் பற்றிய முக்கிய விவரங்களை வழங்கும். இரண்டாவது, பால் தரும் உயர்ரக கால்நடைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய கறவை மந்தையை உருவாக்க வழிகாட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட உயர்ரக பசுக்களின் அடையாளம் குறித்த கையேடு.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் ஏற்பாடு செய்துள்ள அகில இந்திய மோட்டார் பேரணியின் நிறைவு இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாகும். முன்னதாக இந்தப் பேரணியை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகரில் இருந்து 2024 நவம்பர் 19 அன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேரணிக் குழுக்கள் புதுதில்லியில் உள்ள தௌலா குவானில் கடைசி கட்டமாக ஒன்றுகூடி இறுதியாக மானெக்ஷா மையத்தை வந்தடைவார்கள். அங்கு அவர்களை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வரவேற்பார்.
இந்த நிகழ்வில் சிந்தனையைத் தூண்டும் இரண்டு குழு விவாதங்களும் நடைபெறும். முதலாவது, "பெண்கள் தலைமையிலான கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை." இது கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் பெண்களின் பங்களிப்பை குறித்து ஆய்வு செய்யும். அனைத்து பாலினத்தையும் உள்ளடக்குதல் மற்றும் அதிகாரமளித்தலையும் வலியுறுத்தும். "உள்ளூர் கால்நடை ஆதரவு மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல்" என்ற கருப்பொருளில் இரண்டாவது குழு விவாதம் நடைபெறும். இது இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமான உள்ளூர் கால்நடை ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான உத்திகளை ஆய்வு செய்யும்.
இந்த மாபெரும் நிகழ்வில் விவசாயிகளும், பால் கூட்டமைப்புகள், பால் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்பார்கள். தேசிய பால் தினம் 2024 உலகளாவிய பால்வளத் துறையில் இந்தியாவின் தலைமையைக் கொண்டாடுவதாக இருக்கும்.
**
(Release ID: 2076752)
TS/SMB/RR/BR
(Release ID: 2076820)
Visitor Counter : 8