சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்

Posted On: 22 NOV 2024 2:20PM by PIB Chennai

1949, நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய அரசியலமைப்பு, நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ கட்டமைப்பை வரையறுக்கும் அடித்தள ஆவணமாக செயல்படுகிறது. கடந்த ஏழு தசாப்தங்களாக, இது அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் மூலம் தேசத்தை வழிநடத்தியுள்ளது. இந்திய நிர்வாகத்தின் முக்கிய கொள்கைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது. இந்த விழுமியங்கள் ஆண்டுதோறும் அரசியலமைப்பு தினத்தன்று கொண்டாடப்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. குடிமக்களிடையே அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியல் சட்ட நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2015 நவம்பர் 19 அன்று அறிவித்தது.

"நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்" இயக்கம், 2024, ஜனவரி 24 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தில் குடியரசு துணைத்தலைவரால் தொடங்கி வைக்கப்பட்டது. இது  அரசியலமைப்பைப் பற்றிய குடிமக்களின் புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய சமூகத்தை வடிவமைப்பதில் அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடிமக்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து கற்பிக்கவும், அடிப்படைக் கொள்கைகள் ஒவ்வொரு இந்தியருடனும் தொடர்ந்து எதிரொலிப்பதை உறுதி செய்யவும் இந்த ஓராண்டு இயக்கம் முயல்கிறது.

பிராந்திய நிகழ்வுகள், பட்டறைகள், கருத்தரங்குகள் மூலம் அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வு உருவாக்கப்படும். அனைத்துப்பின்னணியைச் சேர்ந்தவர்களும் இந்த அத்தியாவசிய அறிவைப் பெறுவதை இந்த இயக்கம்உறுதி செய்கிறது.

இந்திய அரசியலமைப்பின் கீழ் மக்கள் தங்கள் சட்ட உரிமைகள், கடமைகள் மற்றும் தகுதிகள் குறித்து  கற்பதற்காகவும்  இந்த இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு அதிகாரம் அளிக்கிறது. தேசம் மற்றும் சமூகத்திற்கான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதையும் உறுதி செய்கிறது.

புதிய இந்தியா புதிய தீர்மானம் என்ற முன்முயற்சியானது குடிமக்கள் தங்களை ஜனநாயக நடைமுறையில் தீவிர பங்கேற்பாளர்களாக நினைப்பதை  ஊக்குவிக்கிறது. அரசியலமைப்பு விழுமியங்களை மதித்து நிலைநிறுத்துவதன் மூலம் முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் குடிமக்களிடையே "புதிய தீர்மானத்தை" உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

 மக்களுக்கு, அதிலும் குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்தும் அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும் கற்றுத்தருவதை சட்ட விழிப்புணர்வு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆண்டு முழுவதற்குமான "நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்" இயக்கம் பிகானிரில் அதன் முதல் பிராந்திய நிகழ்வுடன் தொடங்கியது. இதனை  2024, மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றத்  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தொடங்கிவைத்தார்.

அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தவும், ஜனநாயக கொள்கைகளை மதிக்கவும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சட்ட மற்றும் அரசியல் செயல்முறைகளில் ஈடுபடவும்  "நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்" இயக்கம் குடிமக்களை ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075924   

***

TS/SMB/RS/KR/DL


(Release ID: 2076046) Visitor Counter : 18