பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
"பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்த்தல்" குறித்த தேசிய பயிலரங்கில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்
Posted On:
19 NOV 2024 2:00PM by PIB Chennai
பொதுமக்களின் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான தேசிய பயிலரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பொறுப்பான மற்றும் திறமையான ஆளுகை குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) 18 நவம்பர் 2024 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் "பொதுமக்கள் குறைகளை திறம்பட தீர்த்தல்" குறித்த தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பயிலரங்கில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, மத்திய தலைமைச் செயலகத்தில் குறை தீர்க்கும் நேரம் தற்போது 13 நாட்களாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த மைல்கல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அவர் கூறினார். 2024 அக்டோபரில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குறைகளைக் கையாண்டுள்ள மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (CPGRAMS) மாற்றத்தக்க சீர்திருத்தங்களை அவர் வலியுறுத்தினார். மத்திய செயலகத்தில் CPGRAMS நிலுவையில் உள்ள குறைகளின் எண்ணிக்கை 2024 அக்டோபர் மாதத்தில் 53,897 ஆக குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய செயலகத்தில் மாதாந்திர குறைதீர்ப்பு, மாதத்திற்கு 1,00,000 -ஐ தாண்டி தொடர்ச்சியாக 28-வது மாதமாக இந்தநிலை நீடிக்கிறது.
குறைகளைக் கையாள்வதை மேலும் திறமையானதாகவும், குடிமக்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, CPGRAMS-களை மேலும் நவீனப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் சார்ந்த மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியதற்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். அரசு சேவையின் தரத்தை அளவிடும் அளவுகோலாக பொதுமக்கள் குறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டாக்டர் சிங், குறைகளை திறம்பட தீர்ப்பது மட்டுமல்லாமல், அவை ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க முறையான சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த பயிலரங்கில் மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உற்சாகமாக பங்கேற்றனர். ஐந்து அமர்வுகள் மற்றும் 22 விளக்கக் காட்சிகளைக் கொண்ட இந்தப் பயிலரங்கு, புதுமையான நடைமுறைகளை விவாதிப்பதற்கும், கொள்கை இணக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், இந்தியாவில் குறை தீர்ப்புக்கான எதிர்கால திசைகளை வகுப்பதற்கும் ஒரு தளமாக செயல்பட்டது.
இந்த நிகழ்வில் குறை தீர்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீடு (GRAI) 2023 வெளியிடப்பட்டது. இது சிறப்பாக செயல்படும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளைப் பாராட்டி பட்டியலிடுகிறது. கூடுதலாக, புதிய CPGRAMS மொபைல் பயன்பாடு 2.0 தொடங்கப்பட்டது, இது குடிமக்களுக்கான குறை சமர்ப்பிப்புகளையும் கண்காணிப்பையும் நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது, விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திற்காகவும் கிடைக்கும்.
நிறைவு விழாவில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், விவாதங்களை சுருக்கமாக எடுத்துரைத்து, ஆளுகை நிலைகளில் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்வதை எளிதாக்குவதற்கான துறையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். பெரும்பாலான அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 23.8.2024 என்ற DARPG சுற்றறிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும், 21 நாட்களுக்குள் சரியான நேரத்தில் குறைகளை நிவர்த்தி செய்வதையும், பிரத்யேக குறைதீர்ப்பு மையங்களை நிறுவுவதையும் உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொறுப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் பார்வையுடன் இணைந்து, திறமையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட குறை தீர்ப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த பயிலரங்கு வெற்றிகரமாக மேலும் வலுப்படுத்தியுள்ளது.
***
(Release ID: 2074573)
TS/MM/AG/KR
(Release ID: 2074604)
Visitor Counter : 14