பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 19 NOV 2024 6:04AM by PIB Chennai

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஸ்டார்மருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் திரு மோடிக்கு பிரதமர் ஸ்டார்மர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த இரு பிரதமர்களும், பொருளாதாரம், வர்த்தகம், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமைப் படைப்புகள், பசுமை நிதி மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்தியா-இங்கிலாந்து விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டியதுடன், சமநிலையான, பரஸ்பர நன்மை அளிக்கும்  மற்றும் முன்னோக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் எஞ்சிய பிரச்சனைகளை பரஸ்பரம் திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தும் குழுக்களின் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர்.

வளர்ந்து வரும் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் பின்னணியிலும், இங்கிலாந்தில் உள்ள இந்திய சமுதாயத்தினரின் தூதரக தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் நோக்கிலும், இரு தரப்பினருக்கும் இடையே மேலும் பேச்சுவார்த்தைக்கான ஏராளமான வாய்ப்புகளை அங்கீகரித்த பிரதமர் மோடி, இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டரில் இரண்டு புதிய இந்திய துணைத் தூதரகங்களை நிறுவுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை பிரதமர் ஸ்டார்மர் வரவேற்றார்.

 இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பொருளாதார குற்றவாளிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். இடப்பெயர்வு தொடர்பான பிரச்சனைகளில் முன்னேற்றம் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா-இங்கிலாந்து விரிவான உத்திசார் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக உள்ள பல்வேறு புரிந்துணர்வுகளை விரைவாக அமல்படுத்த பணியாற்றுமாறு இரு தலைவர்களும் தங்கள் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் அடிக்கடி பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களை நடத்தவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

***

(Release ID: 2074437)
TS/PKV/RR/KR


(Release ID: 2074555) Visitor Counter : 40