கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் – 2024-ன் நிறைவு விழா நடைபெற்றது
Posted On:
13 NOV 2024 5:13PM by PIB Chennai
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு விழாவில் ஆணையத்தின் தலைவர் திரு சுசந்தா குமார் புரோஹித் உரையாற்றினார். சரக்கு கையாளுதல் வசதிகள், சரக்கு வெளியேற்ற உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகத்தில் வரவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதிகள் ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியை அவர் எடுத்துரைத்தார். அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வெளிப்படைத்தன்மையும் வளர்ச்சியும் கைகோர்த்து செல்ல வேண்டும் என்றும், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் முன்னேற்றம் அடையப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இயக்குநர் திரு. பானி பிரதா ராய் தமது உரையில், நாடு வளர்ச்சியில் முன்னேறும் போது, அனைத்து துறைகளிலும் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்படும் சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பிழைகளைக் குறைப்பதற்கும், பணியிட ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் அந்தந்த பணி செயல்முறைகளில் நிலையான இயக்க நடைமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைமை விழிப்புப்பணி அலுவலர் திரு. எஸ். முரளி கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தேச நிர்மாணப் பணிகளில் ஊழலால் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்காக துறைமுகம் நடத்தும் போட்டிகள் இளம் மனங்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
2024 அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை நடைபெற்ற ஒரு வார கால விழிப்புணர்வு வார கொண்டாட்டத்தின் போது, 'தேசத்தின் சுபிட்சமான ஒருமைப்பாட்டின் கலாச்சாரம்' என்ற கருப்பொருளின் கீழ், நாடகம், கட்டுரை எழுதுதல், ஓவியம், பேச்சுப் போட்டி, விவாதம், பாடல், நடனம், டிஜிட்டல் விளக்கக்காட்சி, பல்வேறு பயிற்சிகள், உறுதிமொழி, பேரணி ஆகியவை ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. துறைமுக ஒப்பந்தக்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான உணர்திறன் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இயக்குநர் திரு.பானி பிரதா ராய், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு.சுசந்தகுமார் புரோஹித் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், உயர் அலுவலர்கள், துறைமுக ஊழியர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், பங்குதாரர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
***
PKV/RR/KV
(Release ID: 2073066)
Visitor Counter : 25