மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் குறித்த பயிலரங்கை மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்

Posted On: 08 NOV 2024 4:06PM by PIB Chennai

மீன்வளத் துறையை முழுமையான அளவில் மாற்றியமைப்பதிலும், நீலப் புரட்சியின் மூலம் நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தையும், வளத்தையும் கொண்டு வருவதிலும் மத்திய அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், மத்திய அரசின் மீன்வளத் துறை, பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ .38,572 கோடி அளவிலான ஒட்டுமொத்த முதலீடுகளை அறிவித்துள்ளது.

அதன் தொடக்கத்திலிருந்து, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் நிலையான, பொருளாதார ரீதியாக சாத்தியமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. முக்கிய முயற்சிகளில் நவீன மீன்வளர்ப்பு நடைமுறைகள், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் மீன் போக்குவரத்து, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தின் சமீபத்திய ஆய்வு ஆகியவை அடங்கும்.

இந்த சூழலில், ட்ரோன்கள் இந்தத் துறையில் உள்ள பல சவால்களுக்கு, பலவிதமான பயன்பாடுகளை வழங்குகின்றன. நீர் மாதிரிகள் எடுத்தல், நோய்களைக் கண்டறிதல், மீன் தீவன மேலாண்மை ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய முக்கிய பகுதிகளாகும். நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகளை நிர்வகித்தல், மீன் விற்பனையை கண்காணித்தல், மீன்வள உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை மதிப்பிடுதல் மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது, மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கும் இந்த நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. துல்லிய மீன்பிடித்தல் மற்றும் மீன் இருப்பு மதிப்பீடு போன்ற பிற முக்கிய நடவடிக்கைகள் இதில் அடங்கும். நீருக்கடியில் ட்ரோன்கள், கூடுதலாக, அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் மீன்களின் நடத்தையையும், ஒழுங்கற்ற நீச்சல் முறைகள் போன்ற துயரத்தின் அறிகுறிகளையும் கண்காணிக்க முடியும்.

தொடக்க உரையாற்றிய, மீன்வளத்துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மீன்வளத் துறை எடுத்துள்ள முன்முயற்சிகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் உத்திசார் முதலீடுகள் மற்றும் முற்போக்கான கொள்கைகளால் உந்தப்பட்ட இந்தியாவின் மீன்வளத் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துரைத்தார்.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு கிராமத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீட்டில், 100 பருவநிலை-நெகிழ்திறன் கொண்ட கடலோர மீனவ கிராமங்கள் மேம்படுத்தப்படும் என்றும் மத்திய இணைமைச்சர் அறிவித்தார்.

இந்த முயற்சி மீன் உலர்த்தும் தளங்கள், பதப்படுத்தும் மையங்கள் மற்றும் அவசரகால மீட்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதன் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பின்னடைவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கடற்பாசி சாகுபடி மற்றும் பசுமை எரிபொருள் முயற்சிகள் போன்ற காலநிலை-நெகிழ்திறன் நடைமுறைகளையும் ஆதரிக்கிறது. மீன்வளர்ப்பு பண்ணைகள் மற்றும் மீன்வள உள்கட்டமைப்பு, குறிப்பாக பேரழிவுகளின் போது கண்காணிப்பதில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பங்கை அமைச்சர் எடுத்துரைத்தார், மேலும் 364 கோடி ரூபாய் முதலீட்டில் நிகழ்நேர கண்காணிப்பு, வானிலை எச்சரிக்கைகள் மற்றும் தகவல் தொடர்புக்காக ஒரு லட்சம் மீன்பிடி கப்பல்களை டிரான்ஸ்பாண்டர்களுடன் சித்தப்படுத்தும் திட்டங்களையும் எடுத்துரைத்தார்.

ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் செயல்விளக்கம் குறித்த பயிலரங்கு, புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை வழங்கியதுடன், மீன்வளத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் உருமாறும் பங்கை வலியுறுத்தியது. இதில், 700-க்கும் மேற்பட்ட மீனவர், மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.

******************

MM/KPG/KR/DL


(Release ID: 2071828) Visitor Counter : 20