பாதுகாப்பு அமைச்சகம்
அமெரிக்க கூட்டு சிறப்புப் படை பயிற்சிக்காக இந்திய ராணுவப் பிரிவு புறப்பட்டது
Posted On:
01 NOV 2024 2:40PM by PIB Chennai
இந்தியா-அமெரிக்க கூட்டு சிறப்புப் படை பயிற்சியான வஜ்ரா பிரஹார் பயிற்சியின் 15வது பதிப்பில் கலந்து கொள்ள இந்திய ராணுவக் குழு இன்று புறப்பட்டது.
இந்தப் பயிற்சியை 2024 நவம்பர் 2 முதல் 22 வரை அமெரிக்காவின் இடாஹோவில் உள்ள ஆர்ச்சர்ட் போர் பயிற்சி மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே பயிற்சியின் கடைசி பதிப்பு 2023 டிசம்பரில் மேகாலயாவின் உம்ரோவில் நடத்தப்பட்டது. இது இந்திய மற்றும் அமெரிக்க ராணுவத்திற்கு இடையிலான ஆண்டின் இரண்டாவது பயிற்சியாகும். இதற்கு முன்பு செப்டம்பர் 2024-ல் ராஜஸ்தானில் இப்பயிற்சி நடத்தப்பட்டது.
இரு நாடுகளையும் சேர்ந்த தலா 45 வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இந்திய ராணுவ படைப்பிரிவை சிறப்பு படை பிரிவுகளும், அமெரிக்க ராணுவ படைப்பிரிவை அமெரிக்காவின் கிரீன் பெரெட்ஸ் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
வஜ்ரா பிரஹார் பயிற்சியின் நோக்கம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பரஸ்பர செயல்பாட்டுத்திறன், கூட்டு மற்றும் சிறப்பு நடவடிக்கை வியூகங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன் மூலம் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும். பாலைவனச் சூழலில் கூட்டு சிறப்புப் படை நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்த திறன்களை இந்தப் பயிற்சி மேம்படுத்தும். இந்தப் பயிற்சி அதிக அளவு உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு வியூகப் பயிற்சிகளில் கவனம் செலுத்தும்.
வஜ்ரா பிரஹார் பயிற்சி இரு தரப்பினரும் கூட்டு சிறப்புப் படை நடவடிக்கைகளை நடத்துவதற்கான தங்களது சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும். இந்தப் பயிற்சி இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் நட்புறவை மேம்படுத்த உதவும்.
***
TS/PKV/RR/KV
(Release ID: 2070116)
Visitor Counter : 23