வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-சவுதி அரேபியா பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்தார் திரு பியூஷ் கோயல்
Posted On:
01 NOV 2024 11:07AM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சவுதி அரேபியாவுக்கான தமது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இந்தப் பயணத்தின்போது, உலகளாவிய அரசுகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் எதிர்கால முதலீட்டு முன்முயற்சியின் 8-வது பதிப்பின் முழுமையான அமர்வில் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்தியாவில் உருவாகி வரும் வாய்ப்புகளை குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற உயர் வளர்ச்சித் துறைகளில் உள்ள வாய்ப்புகளை உலகளாவிய முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா-சவுதி உத்திசார்ந்த கூட்டாண்மை கவுன்சிலின் கீழ் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக் குழுவின் 2-வது அமைச்சர்கள் கூட்டத்திற்கு திரு பியூஷ் கோயல், சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோருடன் 30 அக்டோபர் 2024 அன்று ரியாத்தில் தலைமை தாங்கினார்.
இந்த விவாதங்கள், வர்த்தக அளவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளின் சுமூகமான பரிவர்த்தனையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான செயல்பாட்டு ஒப்பந்தங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தன.
சமீபத்திய ஆண்டுகளில், உணவு ஏற்றுமதி, மருந்துகள், மின்சார இணைப்பு, எரிசக்தி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு உற்பத்தி போன்ற துறைகளை உள்ளடக்கிய பல இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே முறைப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர், அமைச்சர் திரு பியூஷ் கோயல், சவூதி அரேபியாவில் உள்ள இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, இந்தியாவின் விரிவடைந்து வரும் உலகளாவிய வர்த்தக வலைப்பின்னலுக்கு ஆதரவளிப்பதில் பட்டயக் கணக்காளர்களின் பங்கை வலியுறுத்தினார்.
லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் (உயர்நிலை அங்காடி) இந்தியா-சவுதி கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில், எல்இடி மூலம் உருவாக்கப்பட்ட பெரிய விளக்கினை ஏற்றி லுலு வாலி தீபாவளி பண்டிகையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், மத்திய அரசின் உள்ளூர் தயாரிப்பு பொருளுக்கு குரல் எழுப்பும் இயக்கத்தின் ஒரு பகுதியான இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனித்துவமான தயாரிப்புகளைக் கொண்ட "ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் (ODOP)" சுவரை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்தியாவுக்கும், சவுதி அரேபிய அரசாட்சிக்கும் இடையிலான உத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் இந்தப் பயணம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
***************
TS/LKS/RS/KV
(Release ID: 2070057)
Visitor Counter : 37