மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டானா புயலின் போது மீனவர்களுக்கு வழிகாட்டி, அவர்களைக் காத்த உள்நாட்டு டிரான்ஸ்பாண்டர்கள்

Posted On: 29 OCT 2024 2:31PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா) கீழ், டானா புயலின்போது, கப்பல் தகவல் தொடர்பு ஆதரவு அமைப்பின் உதவியுடன் கடலில் மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடிந்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் மகாராஷ்டிராவின் பால்கரில் இருந்து 2024 ஆகஸ்ட் 30 அன்று இது தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டம் ரூ. 364 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மீனவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு டிரான்ஸ்பாண்டர் தொழில்நுட்பத்தைக் கொண்ட கப்பல் தகவல் தொடர்பு ஆதரவு அமைப்பின் சேவையை வழங்கும் இந்த முன்முயற்சி, டானா புயலின் போது மீனவர்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது பாதுகாப்பினை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இத்தொழில்நுட்பம்  குறிப்பிட்ட பரப்புக்கு அப்பாலும் இருவழித் தகவல் தொடர்புக்கு வழிவகை செய்கிறது. அனைத்து 13 கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள ஒரு லட்சம் மீன்பிடி கப்பல்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் (இஸ்ரோ) உருவாக்கப்பட்டது. இது விண்வெளித் துறையின் (டிஓஎஸ்) கீழ் இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

அண்மையில், ஒடிசா இந்த டிரான்ஸ்பாண்டர்களை நிறுவுவதில் தீவிரமாக செயல்பட்டது. மாநிலத்தில் 1000- க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பாண்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அண்மையில் ஒடிசா கடற்கரையையும் அதனை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா பகுதிகளையும் தாக்கிய டானா புயலின் போது ஒடிசா மீனவர்களைப் பாதுகாக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்பட்டது.

இதைப் பயன்படுத்தி மீனவர்களுக்கு நிகழ்நேர அடிப்படையில் எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இது கடலில் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், மீன்வள ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவியது.

இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம், 2024 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 26 வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு  மீனவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர் இந்த எச்சரிக்கையின் நேரம் முக்கியமானதாக இருந்தது. புயல் கரையைக் கடப்பதற்கு முன்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மீனவர்களுக்கு வாய்ப்பை இது ஏற்படுத்தியது.  தகவல்கள் ஆங்கிலம், ஒடியா ஆகிய இரு மொழிகளிலும் தெரிவிக்கப்பட்டன. இதனால் அனைத்து மீனவர்களும் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நெருக்கடியின் போது அடையப்பட்ட வெற்றிகரமான விளைவுகள், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும், எதிர்கால சவால்களுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்கு சான்றாக அமைந்தன. இந்தியா தனது கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதால், டானா புயலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வழிகாட்டும்.  இது மீன்பிடி சமூகத்திற்கு மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

----

(Release ID 2069157)

TS/PLM/KPG/KR

 




(Release ID: 2069193) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi