வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும், 8-வது எதிர்கால முதலீட்டு முன்முயற்சியில் பங்கேற்கவும் திரு பியூஷ் கோயல், சவுதி அரேபியா செல்கிறார்
Posted On:
28 OCT 2024 2:36PM by PIB Chennai
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2024 அக்டோபர் 29 முதல் 30 ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியாவில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் இந்தியா-சவுதி அரேபியா உத்திசார்ந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதையும், வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதார இருப்பை சுட்டிக் காட்டுகிறது. ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு முன்முயற்சியின் 8 வது பகுதியிலும் திரு கோயல் பங்கேற்கிறார். இது உலகளாவிய தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான தளமாகும்.
மேலும், ரியாத்தில் உள்ள லுலு ஹைப்பர்மார்க்கெட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து, துடிப்பான இந்திய சமூகத்தினர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வளர்ந்து வரும் தலைவர்களுடன் கலந்துரையாடும் திரு கோயல், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் உலக அளவில் உள்ளூர் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தூதரகத்தில் ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் அரங்கையும் திரு கோயல் திறந்து வைக்கவுள்ளார்.
இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் உள்ள மகத்தான வாய்ப்புகள் ஆகியவற்றை அவரது பங்கேற்பு எடுத்துரைக்கும். முக்கிய உலக முதலீட்டாளர்களுடன் திரு கோயல் விவாதிக்கவுள்ளார். இந்த கலந்துரையாடல்கள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல், முதலீடுகள் வாய்ப்பை எளிதாக்குதல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்துடன் இணைந்து, விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியாவை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன
எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் வர்த்தக வசதி ஆகியவற்றில் கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்க வர்த்தக அமைச்சர், கைத்தொழில் மற்றும் கனிம வள அமைச்சர், முதலீட்டு அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய சவுதி அமைச்சர்களுடன் அமைச்சர் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் இந்தியா-சவுதி உத்திசார்ந்த கூட்டாண்மை குழுமத்தின் கீழ் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுக் குழுவின் 2 வது அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திற்கு திரு கோயல் இணைத் தலைமை தாங்குவார்.
***
TS/IR/AG/KR/DL
(Release ID: 2068918)
Visitor Counter : 37