குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

என்.ஐ.டி ராய்ப்பூர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்

Posted On: 25 OCT 2024 7:26PM by PIB Chennai

ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 14-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 25, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தொழில்நுட்ப வளர்ச்சி அறிவியலைச் சார்ந்துள்ளது என்றார். 2024-ம் ஆண்டிற்கான இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அவர்களின் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். செயற்கை நரம்பியல் கட்டமைப்புகள் முதல் மைக்ரோ-ஆர்.என்.ஏ ஆய்வு மற்றும் புரத கட்டமைப்பை கணிப்பது வரை, செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இதுபோன்ற பணிகளை, அறிவியல் தொழில்நுட்பத்தின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி உயர்வதன் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்று அவர் கூறினார். பலதுறை அணுகுமுறை, பொறியியல் துறையிலும் புதுமைகளை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த உலகமும் செயற்கை நுண்ணறிவு பாடத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் நிறுவன உறுப்பினராக இந்தியா உள்ளது. சமூக, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு சார்ந்த பல பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு நமது இளம் பொறியாளர்களுக்கு பல புதிய வழிகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்.

உள்ளூர் பிரச்சனைகளுக்கு குறைந்த செலவில் தீர்வுகளை உருவாக்குவது, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். அவர்களின் தொழில்முறை முன்னோக்கு உலகளாவியதாக இருக்க வேண்டும், ஆனால் உள்ளூர் மக்களும் அவர்களின் நிபுணத்துவத்திலிருந்து பயனடைய வேண்டும். 'திங்க் குளோபல், ஆக்ட் லோக்கல்' கொள்கை உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் பொருத்தமானது.

மாணவர்கள் தங்களது முன்னுரிமைகளைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாழ்க்கை மதிப்புகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். அவரவரின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக மட்டுமே வேலை செய்வீர்களா அல்லது சமூகம் மற்றும் நாட்டைப் பற்றி கவலைப்படுவீர்களா என்று குடியரசுத் தலைவர் மாணவர்களிடம் வினவினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2068220

***

MM/AG/DL


(Release ID: 2068237) Visitor Counter : 43