தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிட்டூர் வெற்றிக்கொண்டாட்டத்தின் 200 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், நினைவு அஞ்சல் தலையை அஞ்சல் துறை வெளியிட்டது

Posted On: 24 OCT 2024 3:05PM by PIB Chennai

கிட்டூர் வெற்றிக்கொண்டாட்டத்தின் 200-வது ஆண்டு விழாவையொட்டி 2024 அக்டோபர் 23  அன்று கிட்டூர் கோட்டை வளாகத்தில் உள்ள வரலாற்று  சிறப்புமிக்க கிட்டூர் ராணி சன்னம்மா மேடையில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 1824-ம் ஆண்டு அக்டோபர் 23  அன்று ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ராணி சன்னம்மா பெற்ற மகத்தான வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற்றது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வளமான பாரம்பரியத்தை அஞ்சல் துறை கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இந்திய அஞ்சல் துறை இந்த நாயகர்களை கௌரவிக்கும் வகையில் ஏராளமான அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. இந்த பாரம்பரியம் அவர்களின் நினைவுகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை நினைவில் வைத்துக் கொள்ள எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிட்டூரின் வரலாற்று  சிறப்புமிக்க 200-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ராணி சன்னம்மாவின் வீரம் மற்றும் மரபைக் கொண்டாடும் நினைவு அஞ்சல் முத்திரையை அஞ்சல் துறை பெருமையுடன் வழங்குகிறது.

ஆன்மீகத் தலைவர்கள் ஸ்ரீ ஸ்ரீ மதிவால் ராஜயோகீந்திர மகா ஸ்வாமிஜி, பூஜ்ய ஸ்ரீ பம்சக்ஷரி மஹா ஸ்வாமிஜி, ஸ்ரீஸ்ரீ பசவ ஜய மிருத்யுஞ்சய ஸ்வாமிஜி மற்றும் மதிப்புமிக்க விருந்தினர்கள் பலர் முன்னிலையில் பெங்களூரு கர்நாடக வட்டத்தின் அஞ்சல் துறை தலைமை இயக்குநர் திரு ராஜேந்திர குமார் இந்த தபால் தலையை வெளியிட்டார்.

திரு பிரம் பிரகாஷ் வடிவமைத்த நினைவு  அஞ்சல் தலையில், ராணி சன்னம்மா குதிரை மீது வாளை உருவிக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது போன்ற அவரது வலிமை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தும் அற்புதமான உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அவரது உருவத்தைச் சுற்றி கிட்டூரின் வளமான பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிட்டூர் போரை அடையாளப்படுத்தும் கோட்டைகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067654  

***

TS/IR/RS/K/DL




(Release ID: 2067803) Visitor Counter : 20


Read this release in: Urdu , English , Hindi , Telugu