சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது மூத்த குடிமக்களுக்கான ஒரு மாத கால முன்முயற்சிகளைக் கொண்டாடும் 'சமகம்' நிகழ்ச்சியை நடத்த உள்ளது

Posted On: 24 OCT 2024 1:14PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) அக்டோபர் 25-ந் தேதி  புதுதில்லியின் ஆகாஷ்வாணி வளாகத்தில் உள்ள ரங் பவன் ஆடிட்டோரியத்தில் 'சமகம்' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாத கால நடவடிக்கைகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு இருக்கும்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திரு பி.எல்.வர்மா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் குமார் பால் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த முயற்சிகளின் விளைவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும். கொள்கைத் தலையீடுகள், சமூக பங்கேற்பு மற்றும் பொதுமக்களை சென்றடைதல் ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட நேர்மறையான தாக்கத்தை இது எடுத்துக்காட்டும்.

கடந்த ஒரு மாத காலமாக இந்த அமைச்சகமானது பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, மூத்த குடிமக்களின் நலனுக்காக பரந்த அளவிலான முன்முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை வழங்குதல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.

மூத்த குடிமக்கள் நலனில் அமைச்சகம் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு 'சமகம்' ஒரு சான்றாகும். புதுமையான திட்டங்கள், பங்குதாரர்களுடன் கூட்டு முயற்சிகள் மற்றும் முதியோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கை கட்டமைப்புகள் மூலம், மூத்த குடிமக்கள் ஆதரிக்கப்படுவதை மட்டுமல்லாமல் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய அமைச்சகம் அயராது உழைத்து வருகிறது.

மூத்த குடிமக்களை மேம்படுத்துதல், சுகாதாரம், நிதிப் பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான அமைச்சகத்தின் எதிர்கால இலக்குகளை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இந்த நிகழ்வு செயல்படும். சமூகத்திற்கு மூத்த குடிமக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம், முதியோருக்கு மிகவும் உள்ளடக்கிய, இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் அதிக சமூகப் பொறுப்பை ஊக்குவிப்பதை 'சமகம்' நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2067619)

TS/PKV/RR/KR




(Release ID: 2067661) Visitor Counter : 14