சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துடிப்பான இந்தியாவுக்கான பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்

Posted On: 23 OCT 2024 5:17PM by PIB Chennai

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற பார்வையுடன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் துடிப்பான இந்தியாவுக்கான பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை (PM-YASASVI) செயல்படுத்தி வருகிறது. இந்த விரிவான பெருந்திட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமானது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான டாக்டர் அம்பேத்கர் போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை திட்டம், சீர்மரபினருக்கான டாக்டர் அம்பேத்கர் ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்துகிறது. முந்தைய திட்டங்கள் அனைத்தும் 2021-22ஆம் ஆண்டு முதல் இந்தப் பெருந் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இந்தத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பயனுள்ள அணுகுமுறையை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நலிவுற்ற பிரிவினரிடையே கல்வி அதிகாரமளித்தலை ஊக்குவிப்பது, நிதித் தடைகளை சமாளித்து அவர்களின் கல்வியை நிறைவு செய்ய உதவுவதாகும். இந்த முயற்சி தனிப்பட்ட கல்வி வளர்ச்சியை வளர்ப்பது மட்டுமல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான பரந்துபட்ட கண்ணோட்டத்துக்கும் பங்களிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை, போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை ஆகியவற்றைப் பெறலாம். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள், 'உயர்தர பள்ளிக் கல்வி' மற்றும் 'உயர்தர கல்லூரிக் கல்வி' திட்டத்தின் கீழ் உயர்தர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்க உதவித்தொகை பெறும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கான விடுதிகள் கட்டும் திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு விடுதி வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வருடாந்திர கல்வி  உதவித்தொகையாக ரூ.4,000 வழங்கப்படுகிறது. 2023-24 கல்வியாண்டில் இதை செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.32.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை மேல் நிலைக் கல்வி பயிலும்  மாணவர்களுக்கு உதவுகிறது, பயிலும் பாடத்தின் வகையின் அடிப்படையில் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.387.27 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, உயர்தர பள்ளி மற்றும் கல்லூரி கல்வித் திட்டங்கள் மேற்கூறிய பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் கல்விக் கட்டணம், விடுதி செலவுகள் மற்றும் பிற கல்விச் செலவுகளை உள்ளடக்கியதாகும். பள்ளி மாணவர்கள் (9-12 ஆம் வகுப்பு) ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை நிதியுதவி பெற தகுதியுடையவர்கள். சிறந்த நிறுவனங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் கல்வி, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விப் பொருட்கள் உட்பட முழு நிதி உதவியைப் பெறுகிறார்கள். கல்வி பெறும் வாய்ப்பை மேலும் மேம்படுத்த, 2023-24 ஆம் ஆண்டில் 'ஓபிசி சிறுவர் மற்றும் சிறுமியருக்கான விடுதிகளை நிர்மாணித்தல்' திட்டத்தின் கீழ் ரூ.12.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அருகில் தங்குமிடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைவரையும் உள்ளடக்குதல், சமத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டை வளர்ப்பதற்கான அரசின் பரந்துபட்ட பார்வையுடன் பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரமான கல்வியை அணுகுவதைத் தடுக்கும் தடைகளை இது நேரடியாக நிவர்த்தி செய்கிறது. இந்த முன்முயற்சி நிதி உதவியை உறுதி செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு கல்வி மூலம் அதிகாரம் அளிப்பதையும் ஊக்குவிக்கிறது, இதன் மூலம் மேல்நோக்கிய இயக்கம் மற்றும் தற்சார்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மட்டங்களில் மாணவர்களுக்கு உதவும் இந்தத் திட்டத்தின் கவனம் சிறு வயதிலிருந்தே திறமையை வளர்ப்பதற்கும் அதை உயர் கல்விக்கு கொண்டு செல்வதற்கும் வழி வகுக்கிறது. இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. மேலும், முந்தைய உதவித்தொகை முயற்சிகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்காக 2023-24 நிதியாண்டில், ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகைக்காக ரூ.193.83 கோடி ஒதுக்கப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டில் 19.86 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்தனர். இதேபோல், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில் 27.97 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.988.05 கோடி விடுவிக்கப்பட்டது. இந்த உதவித்தொகைகள் நிதிச் சுமைகளைத் தணிப்பதன் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் விளிம்பு நிலை சமூகங்கள்  கல்வியை  அணுக வழி ஏற்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2067373   

------------

TS/PKV/AG/DL


(Release ID: 2067445) Visitor Counter : 58


Read this release in: English , Urdu , Hindi , Assamese