இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா 2024 வரைவு குறித்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்

Posted On: 23 OCT 2024 3:55PM by PIB Chennai

தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா 2024 வரைவு குறித்து விவாதிக்க மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் இன்று சம்பந்தப்பட்ட தரப்பினருடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தியாவில் விளையாட்டுக்கான வலுவான ஆளுகைக் கட்டமைப்பை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட வரைவு மசோதா குறித்த உள்ளீடுகளை சேகரிக்க, பல்வேறு தரப்பினருடன் நடத்தப்படும் தொடர்ச்சியான சந்திப்பு கூட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை அமைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா தேசிய விளையாட்டு ஆளுகை வரைவு மசோதா 2024, விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி மற்றும் நலனை மேம்படுத்துவதற்கும், முறையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும், பிரச்சனைகளுக்கு பயனுள்ள  தீர்வு வழிமுறைகளை வழங்குவதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். "விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்டவர்களின் மாறுபட்ட தேவைகளை மனதில் கொண்டு, முழுமையான அணுகுமுறையுடன் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

டாக்டர் மாண்டவியா, பங்கேற்பாளர்களை தங்கள் நுண்ணறிவுகளையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். "விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்டவர்கள் உண்மையிலேயே பயனடைய இந்த மசோதாவை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான உங்கள் மதிப்புமிக்க உள்ளீடுகளுக்காக நீங்கள் இங்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள்." விளையாட்டு திறமைகளை வளர்ப்பதில் பயிற்சியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அவர் ஒப்புக் கொண்டார், "நமது பயிற்சியாளர்களுக்கு நாம் எவ்வளவு அதிகாரம் அளிக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக அவர்கள் நாட்டிற்காக சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்"

இந்திய இளைஞர்களின் திறனையும், அவர்களின் திறமையையும் சரியான திசையில் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

கூட்டத்தின் போது, வரைவு மசோதா மீதான விவாதத்திற்கு பங்களிக்க வாய்ப்பளித்ததற்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அவர்கள் தங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்த முயற்சி இந்திய விளையாட்டுகளில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை நோக்கிய நேர்மறையான பாதையைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அர்ஜுனா விருது பெற்றவர்கள், கேல் ரத்னா விருது பெற்றவர்கள், ஒலிம்பிக் வீரர்கள், பாராலிம்பிக் வீரர்கள் மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர்கள் உட்பட பல்வேறு புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சுமார் 40 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் சுமார் 120 பேர் மெய்நிகர் முறையில் இணைந்தனர். ரோஞ்சன் சோதி, மன்ஷர் சிங், நீரஜ் சோப்ரா, குர்பக்ஸ் சிங், அசோக் குமார் தியான் சந்த், பவானி தேவி, நிகாத் ஜரீன், அங்கூர் தாமா, மகா சிங் ராவ், டாக்டர் சத்ய பால் சிங் போன்ற முக்கியமான முன்னாள் மற்றும் தற்போதைய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரைவு மசோதா குறித்து தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் வழங்கினர்.

சட்டத்திற்கு முந்தைய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் / ஆலோசனைகளை வரவேற்க, வரைவு தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2024-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பொது தளத்தில் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சகத்திற்கு ஆலோசனைகள் / கருத்துக்களை draft.sportsbill[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் 25.10.2024-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067331   

--------------


TS/IR/RS/DL




(Release ID: 2067420) Visitor Counter : 28