மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய சர்வதேச கல்வி மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்

Posted On: 23 OCT 2024 3:09PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய சர்வதேச கல்வி மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். பின்னர்  ஆஸ்திரேலிய கல்வியமைச்சர் திரு ஜேசன் கிளேர் உடன் திரு தர்மேந்திர பிரதான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களின் பிரதிநதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான வலுவான, வளர்ந்து வரும் ஒத்துழைப்பை திரு தர்மேந்திர பிரதான் தமது உரையில் பாராட்டினார். இது இரு நாடுகளின் வரலாற்றை இணைத்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு. அந்தோணி அல்பனீஸ் ஆகியோரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்த உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

4-வது தொழிற்புரட்சியில், தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக, மாணவர்களை கல்வி தயார்படுத்த வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை, வளர்ந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வியறிவு, மென் திறன்கள், விமர்சன சிந்தனை, பலதுறை ஆய்வுகள் ஆகியவற்றை வலியுறுத்தும் கட்டமைப்பை வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.கல்வியில் ஒத்துழைப்பு என்பது இந்திய - ஆஸ்திரேலிய உறவின் அடிப்படை என்றும் திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

திரு ஜேசன் கிளேர் தமது உரையில், நல்ல கல்வி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நல்ல கல்வியால் நாடுகளை சிறந்த முறையில் மாற்றியமைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் கல்வி முறைகளைப் பாராட்டிய அவர், 2035 ஆம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் பல்கலைக்கழக பட்டம் பெறும் நான்கில் ஒருவர் இந்தியாவில் இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

***

TS/PLM/KPG/KR/DL




(Release ID: 2067404) Visitor Counter : 25