ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற நில ஆவணங்களுக்கான ஆய்வு- மீளாய்வில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நாள் பயிலரங்கின் நிறைவு அமர்வில் மத்திய இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இன்று உரையாற்றினார்

Posted On: 22 OCT 2024 5:16PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நகர்ப்புற நில ஆவணங்களுக்கான ஆய்வு – மீளாய்வில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற இரண்டு நாள் பயிலரங்கின் நிறைவு விழாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இன்று உரையாற்றினார். நிர்வாகத்துக்கு உதவும் உபகரணங்களை விட, துல்லியமான நில ஆவணங்களே சமூகப் பொருளாதாரத் திட்டமிடல், பொதுச் சேவை வழங்கல் மற்றும் முரண் தீர்வு ஆகியவற்றின் முதுகெலும்பாக உள்ளன என்று இணை அமைச்சர் தமது உரையின் போது கூறினார். இந்த சர்வதேச பயிலரங்கு ஆய்வு-மீளாய்வு நுட்பங்கள், புவி இடஞ்சார்ந்த கருவிகள், ட்ரோன் மற்றும் விமான தொழில்நுட்பங்கள் மற்றும் ஜிஐஎஸ் ஒருங்கிணைந்த தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆராய்ந்தது. இந்தப் பயிலரங்கில் பகிரப்பட்ட கூட்டு நுண்ணறிவுகள் இந்தியாவில் ஸ்மார்ட் மற்றும் திறமையான நகர்ப்புற மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளமாக செயல்படும். நகர்ப்புற நில அளவீட்டுக்கான புதுமையான தீர்வைக் கண்டறியும் பணியில் உலகளாவிய நிபுணர்கள் மற்றும் தலைவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கிராமப்புற நில ஆவணங்கள் உருவாகும்போது, நகரங்களின் விரைவான நகரமயமாக்கலின் தேவையைப் பூர்த்தி செய்ய நகர்ப்புற நில நிர்வாகமும் மேம்பட வேண்டும் என்றும், சமமான வளர்ச்சியை உறுதி செய்ய நில நிர்வாகம் வேகமாகச் செயல்பட வேண்டும் என்றும் டாக்டர் பெம்மசானி கூறினார். நகர்ப்புற நிர்வாகத்தில் தொழில்நுட்பமானது வாய்ப்புகளைச் சந்திக்கும் ஒரு முக்கிய தருணத்தில் நாம் இப்போது நிற்கிறோம். ஆளில்லா விமானங்கள், விமான அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற கருவிகள் இணையற்ற துல்லியத்தை வழங்குகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் திருத்தப்பட்ட படங்களை வழங்குகின்றன, அவை பூமியின் மேற்பரப்புக்கு துல்லியமாகவும் உண்மையாகவும் உள்ளன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், மனிதப் பிழைகளைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்கிறோம். உயரமான கட்டிடங்கள், அடர்த்தியாக தாவரங்கள் உள்ள பகுதிகள் மற்றும் சிக்கலான நில பயன்பாட்டு முறைகள் ஆகியவற்றைக் கொண்ட மிகவும் சவாலான நகர்ப்புற சூழலில் நிலையான புதுப்பித்த தரவைச் சேகரிக்கிறோம். இந்தப் படங்களை ஜி.ஐ.எஸ் தளங்களில் ஒருங்கிணைப்பது தரவை செயல்படக்கூடிய நுண்ணறிவுகளாக மாற்றும். நகர்ப்புற திட்டமிடல், ரியல் எஸ்டேட் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் முன்னோடியில்லாத துல்லியத்துடன் பேரழிவை எதிர்கொள்ளும் தயார்நிலை ஆகியவற்றை செயல்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், டிஜிட்டல் இந்தியா, நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் போன்ற முன்முயற்சிகளின் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் கூறினார். இந்தியா 6.25 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சொத்துப் பத்திரங்கள் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது, பூ-ஆதார் என்று அழைக்கப்படும் பிரத்யேக நில பார்சல் அடையாள எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. வருவாய் மற்றும் பதிவு முறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், கிராமப்புற நிலப் பதிவுகள் உருவாகும்போது, விரைவான நகரமயமாக்கலின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய நகர்ப்புற நில நிர்வாகமும் மேம்பட வேண்டும். நகரங்கள் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் விரிவடைந்து வருகின்றன, மேலும் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய நில நிர்வாகம் வேகமாகச் செயல்பட வேண்டும். நகர்ப்புற நில மேலாண்மை என்பது வெறும் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமல்ல, அது பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடித்தளம் என்று அவர் கூறினார்.

மேலும், இடஞ்சார்ந்த நிலப் பதிவுகளை உருவாக்குவதன் மூலம், ஒரு நிலத்தின் மீதான பல சொத்து உரிமைகோரல்கள், சீரற்ற நில மதிப்பீடுகள் மற்றும் எல்லைத தகராறுகள் போன்ற நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் டாக்டர் பெம்மசானி கூறினார். பாரம்பரிய விலையுயர்ந்த மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் கணக்கெடுப்புகளைத் தாண்டி, நகர்ப்புற நிர்வாகத்தில் ஒரு புதிய சகாப்தத்திற்கு இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமெரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி, இந்தியா மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டுள்ளனர் என்பதையும் தாக்கத்தை ஏற்படுத்தும் கள ஆய்வுகள் எடுத்துரைக்கப்பட்டன  என்பதையும் அறிந்து மத்திய இணை அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார் . நகர்ப்புற நில நிர்வாகத்தின் சவால்களை சமாளித்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இந்தப் பயிலரங்கு ஒரு மாற்றத்திற்கான பயணத்தின் முடிவு அல்ல, ஆனால் தொடக்கம். இங்கு பெறப்பட்ட நுண்ணறிவுகள், நகர்ப்புற நில ஆவணங்களை நவீனமயமாக்குவதற்கான தேசிய திட்டத்தை வடிவமைக்கும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் முன்னோட்ட திட்டங்களை உருவாக்குவதை நாங்கள் கற்பனை செய்கிறோம். இந்தப் பயிலரங்கை விட்டு வெளியேறும்போது, இங்கு விவாதிக்கப்பட்ட அறிவு, தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்புடன் நாங்கள் செல்வோம். நகர்ப்புற நில நிர்வாகத்தில் வெளிப்படையான, திறமையான மற்றும் சமமான முறையை நாம் இணைந்து உருவாக்குவோம் என்று அவர் மேலும் கூறினார். நகர்ப்புற நில மேலாண்மை என்பது வெறும் தொழில்நுட்பப் பயிற்சி மட்டுமல்ல, அது பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடித்தளம் என்று டாக்டர் பெம்மசானி வலியுறுத்தினார்.

இந்த  இயக்கத்திற்காகவும், நவீன இந்தியாவின் திறன்களை உலகின் பிற பகுதிகளுக்கு வழங்குவதற்காகவும் மத்திய அமைச்சர் முழு நில வளத் துறையையும் அனைத்து அதிகாரிகளையும் பாராட்டினார்.

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சுமார் 130 நகரங்களில் ஓராண்டு காலத்திற்குள் நில ஆவணங்களை உருவாக்கும் நோக்கில் "நகர்ப்புற குடியிருப்புகளின் தேசிய புவியியல் சார்ந்த அறிவு அடிப்படையிலான நில அளவீடு" என்ற முன்னோடி திட்டத்திற்கு நில வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

நில ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல், பங்குதாரர்கள், குறிப்பாக மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றி விவாதித்து புரிந்து கொள்வது குறித்து மற்ற நாடுகளின் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும் இந்த பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நகர்ப்புற நிலப்பகுதிகள் மற்றும் சொத்துக்களை வரைபடமாக்குவதற்கு வான்வழி புகைப்படத்தைப் பயன்படுத்தி துல்லியமான மற்றும் திறமையான ஆர்த்தோ திருத்தப்பட்ட பட உருவாக்கத்துடன் மேம்பட்ட நில வரைபடம் குறித்த விவாதங்களுக்கு இந்த பயிலரங்கு வழிவகுத்தது. அமெரிக்கா, ஸ்பெயின், தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை கூட்டுதாரர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த செயலமர்வின் போது தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். வெற்றிகரமான கள ஆய்வுகள், புதுமையான அணுகுமுறைகள், கொள்கை கட்டமைப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாடு குறித்த விளக்கக்காட்சிகளுக்கு இந்த பயிலரங்கு வழிவகுத்தது.

இந்த பயிலரங்கு உலகெங்கிலும் இருந்தும், உள்நாட்டிலிருந்தும் நிபுணர்கள் மற்றும் தலைவர்களின் ஒரு சிறந்த சந்திப்பு கூட்டமாக இருந்தது மற்றும் நகர்ப்புற நில அளவீடு என்ற முக்கியமான தலைப்பில் நடத்தப்பட்ட  முக்கியமான பயிலரங்கம் ஆகும். நகர்ப்புற நில ஆவணங்களுக்கான கணக்கெடுப்பு-மறு அளவீட்டில் நவீன தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் புதுமைகள் குறித்த விவாதங்களுக்கு இது வழிவகுத்தது, மேலும் நமது நாட்டின் நகர்ப்புறங்களில் நில நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அதிநவீன தொழில்நுட்பங்களையும் இது காட்சிப்படுத்தியது.

***

TS/PKV/KV/DL


(Release ID: 2067132)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati