பாதுகாப்பு அமைச்சகம்
எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவத்தை உருவாக்குதில் அரசு கவனம் செலுத்துகிறது: புதுதில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரை
Posted On:
19 OCT 2024 2:31PM by PIB Chennai
மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த வேண்டும் என ராணுவத் அதிகாரிகளைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று (2024 அக்டோபர் 19) புதுதில்லியில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 62-வது (NDC) பாடத்திட்டத்தின் கீழ் எம்ஃபில் படித்த,2022-ம் ஆண்டு தொகுதி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். உலகளாவிய எதிர்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, சிறந்த வழிநடத்தும் திறன் கொண்ட சிந்தனையாளர்களாக செயல்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
போர்முறையானது இன்று, பாரம்பரிய போர்க்களங்களை விஞ்சி பல கள சூழல்களைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் இணையதள தாக்குதல், தகவல் போர், போன்றவையும் வழக்கமான நடவடிக்கைகளைப் போலவே முக்கியமானது என அவர் கூறினார். இணையதள தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள், பொருளாதார போர் ஆகியவை ஒரு தோட்டா கூட சுடப்படாமல் ஒரு முழு தேசத்தையும் பாதிப்புக்கு உட்படுத்தக்கூடியவை என்று அவர் குறிப்பிட்டார். சிக்கலான பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து புதுமையான தீர்வுகளை உருவாக்கும் திறனை ராணுவத் அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலத்திற்கு ஏற்ற ராணுவத்தை உருவாக்கும் மிக முக்கியமான சக்தி என்று திரு ராஜ்நாத் சிங் விவரித்தார். நமது அதிகாரிகள் இந்த தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போரின் சவால்களை சமாளிக்க, நவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் என்டிசி போன்ற பாதுகாப்பு கல்வி நிறுவனங்கள் ஆற்றி வரும் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், உலகளாவிய பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து உறுதியான புரிதலை அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் போர்க்களத்திற்கு அப்பால், ராஜதந்திரம், பொருளாதாரம், சர்வதேச சட்டம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, சிறந்த ராணுவத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.
எம்ஃபில் பட்டம் பெற்ற அதிகாரிகளை, குறிப்பாக நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். இது இந்தியாவுக்கும் அந்தந்த நாடுகளுக்கும் இடையிலான பாலமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு ஆர்.கே.சிங், என்டிசி கமாண்டன்ட் ஏர் மார்ஷல் ஹர்தீப் பெய்ன்ஸ், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.ஏழுமலை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், என்டிசி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
*****
PLM/ KV
(Release ID: 2066293)
Visitor Counter : 70