கலாசாரத்துறை அமைச்சகம்
பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரித்தல் மற்றும் அபிதம்மா தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார்
Posted On:
15 OCT 2024 4:37PM by PIB Chennai
சர்வதேச பௌத்த கூட்டமைப்பு (ஐபிசி), கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து சர்வதேச அபிதம்மா தினத்தைக் கொண்டாட உள்ளது, அதே நேரத்தில் மத்திய அரசு, பாலி மொழியைச் செம்மொழியாக சமீபத்தில் அறிவித்ததையும் கொண்டாடுகிறது. அக்டோபர் 17ந்தேதி விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். அபிதம்மா தினத்தின் முக்கியத்துவம், பாலி மொழியின் முக்கியத்துவம் மற்றும் புத்த தம்மத்தின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பிரதமர் தமது கருத்துக்களம்ப் பகிர்ந்து கொள்வார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் சிறப்புரையாற்றுவார். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜுவும் இதில் பங்கேற்கவுள்ளார்.
அபிதம்மா குறித்த புத்தரின் போதனைகள் முதலில் பாலி மொழியில் கிடைத்துள்ளன என்பதால், பாலி மொழியை ஒரு செம்மொழியாக அண்மையில் அங்கீகரித்திருப்பது, இந்த ஆண்டின் அபிதம்மா தினக் கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.
அபிதம்மா தினம் என்பது முப்பத்தி மூன்று தெய்வீக மனிதர்களின் வான சாம்ராஜ்யத்திலிருந்து, உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மாவட்டத்தில் இன்று சங்கீசா பசந்தபூர் என்று அழைக்கப்படும் சங்கசியாவுக்கு புத்தர் இறங்கியதை நினைவுகூருகிறது. இந்த இடத்தின் முக்கியத்துவத்தை இந்த வரலாற்று நிகழ்வின் நீடித்த அடையாளமான அசோகரின் யானைத் தூண் இருப்பதன் மூலம் காட்டப்படுகிறது. பாலி நூல்களின்படி, புத்தர் தனது தாயின் தலைமையில் இருந்த தவதிம்ச சொர்க்கத்தின் கடவுள்களுக்கு முதலில் அபிதம்மத்தை உபதேசித்தார். மீண்டும் பூமிக்குத் திரும்பிய அவர், தனது சீடர் சாரிபுத்தரிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். இது இந்தப் புனித தினத்தின் சிறப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில், அருணாச்சலப் பிரதேச மகாபோதி மைத்ரி மகாமண்டல் தலைவர் பன்யரக்கிதா அவர்களின் தர்ம போதனைகள் இடம்பெறும். '21-ம் நூற்றாண்டில் அபிதம்மாவின் முக்கியத்துவம்' மற்றும் 'பாலி மொழியின் தோற்றம் மற்றும் சமகால காலங்களில் அதன் பங்கு' ஆகிய கருப்பொருள்களில் புகழ்பெற்ற அறிஞர்கள் நுண்ணறிவு ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் இரண்டு கல்வி அமர்வுகள் இந்த நாளில் நடைபெறும்.
சர்வதேச அபிதம்மா தினம் சுமார் 1000 பிரதிநிதிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 14 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் துறவிகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புத்த தம்மம் குறித்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இளைஞர் நிபுணர்களுடன் பங்கேற்க உள்ளனர். இவர்கள், இந்தப் போதனைகளில் இளைய தலைமுறையினரின் வளர்ந்து வரும் ஈடுபாட்டை வலியுறுத்துவார்கள்.
***
PKV/DL
(Release ID: 2065044)
Visitor Counter : 54