புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ. 500 கோடி மதிப்பில் புதுமைத் திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Posted On:
11 OCT 2024 5:28PM by PIB Chennai
மத்திய புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் (PM-Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் 'புதுமையான திட்டங்களை' செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களை 2024 அக்டோபர் 08 அன்று வெளியியிட்டுள்ளது.
'புதுமையான திட்டங்கள்' என்ற பிரிவின் கீழ், மேற்கூரை சூரிய தொழில்நுட்பங்கள், வணிக மாதிரிகள், ஒருங்கிணைப்பு நுட்பங்கள் ஆகியவற்றில் முன்னேற்றங்களை ஊக்குவிக்க ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் அடிப்படையிலான பியர்-டு-பியர் சோலார் டிரேடிங், ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ், மின்சார வாகனங்கள், பேட்டரி சேமிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேற்கூரை சூரிய சக்தி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பிரிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், புத்தொழில் நிறுவனங்களை அடையாளம் கண்டு ஆதரிக்க இந்த அம்சம் முயல்கிறது.
இதை முன்னெடுத்துச் செல்ல, புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், முன்மொழிவுகளை வரவேற்று, கூட்டு ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கும். தேசிய சூரிய எரிசக்தி நிறுவனம் (NISE) புதுமையான திட்டங்களுக்கான திட்ட அமலாக்க முகமையாக செயல்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு திட்ட செலவில் 60% அல்லது ரூ. 30 கோடி வரை, எது குறைவோ அது நிதி உதவியாகக் கிடைக்கும். கூடுதலாக, கண்டுபிடிப்புகளுக்கான வருடாந்திர விருதுகள், மேலும் முன்னேற்றங்களை ஊக்குவிக்க ரூ. 1 கோடி வரை பரிசுகளுடன் வழங்கப்படும்.
மத்திய அரசு, பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் திட்டத்துக்கு 2024 பிப்ரவரி 29 அன்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் வீடுகளில் சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டம் ரூ. 75,021 கோடி செலவில் 2026-27-ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது.
******************
PLM/KV
(Release ID: 2064381)