வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
உலக வாழ்விட தின நிகழ்ச்சி: வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
09 OCT 2024 5:54PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பில் உலக வாழ்விட தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று (09.10.2024) சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி அமைச்சகத்தின் செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கடிகிதாலா, வீட்டுவசதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சதீந்தர் பால் சிங், வீட்டுவசதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் திரு தினேஷ் கபிலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விரைவான வளர்ச்சியை அடைவதற்கும், நகரங்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நகர்ப்புற மேம்பாட்டில் நாட்டின் இளைஞர்கள் பங்காற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர் திரு டோகான் சாஹு கூறினார். உலக வாழ்விட தினத்தின் கருப்பொருளான 'சிறந்த நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களை ஈடுபடுத்துதல்' என்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர் கூறினார். ஏனென்றால் சராசரியாக 35 வயதுக்கும் குறைவான நபர்களின் விகிதம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அதிகம் என்று அவர் எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இளைஞர்களின் தீவிர ஈடுபாடு இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.
அமைச்சகத்தின் செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கடிகிதலா பேசுகையில், இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், ஆதரவுடன் இந்தியாவின் வளர்ச்சியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார். இந்திய இளைஞர்களின் திறமை நகர்ப்புற மேம்பாட்டை சிறப்பாக மறுவடிவமைப்பதில் முக்கியப் பங்களிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
----
PLM/KPG/DL
(Release ID: 2063619)
Visitor Counter : 39