பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் பார்வை நிலையான வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு மூலம் கூட்டாண்மைகளை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது: இந்தியா-பசிஃபிக் பிராந்திய உரையாடல் 2024-ல் பாதுகாப்பு அமைச்சர்

Posted On: 04 OCT 2024 5:33PM by PIB Chennai

நிலையான வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் கூட்டாண்மைகளை வளர்ப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதால், "இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் பார்வை, பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் யோசனையை அடிப்படையாகக் கொண்டது" என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அக்டோபர் 04 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-பசிஃபிக் பிராந்திய உரையாடல் 2024-ல் உரையாற்றியஅவர், கூட்டு நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பு மூலமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் இந்தியா தனது கூட்டாளிகளுடனான ஈடுபாட்டைக் கொள்கிறது என்றார். இந்த முயற்சிகள் காரணமாக, இந்தப்  பிராந்தியத்தில் நம்பகமான மற்றும் விருப்பமான பாதுகாப்பு கூட்டாளியாகவும், முதலில் உதவுபவராகவும் இந்தியா தற்போது கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, சர்வதேச சட்டத்தை மதித்தல், கடல் சட்டம் தொடர்பாக ஐநா மாநாட்டில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு இணங்கி நடப்பது ஆகியவற்றில்  இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தினார். "சர்ச்சைகள் மீது அமைதியான தீர்வுக்கு  இந்தியா தொடர்ந்து பாடுபட்டுள்ளது, இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முயன்றுள்ளது. பிராந்திய உரையாடல், நிலைத்தன்மை மற்றும் கூட்டு வளர்ச்சியை அதிகரிப்பதில் ஆசியானின் மையத்திற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று அவர் கூறினார்.

முக்கியமான சர்வதேசக் கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கூட்டுப் பயிற்சிகள், தகவல் பகிர்வு முயற்சிகள் உட்பட பிராந்திய கூட்டாளர்களுடனான ஈடுபாடு, கூட்டு கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்திய ராணுவம், குறிப்பாக கடற்படை, இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது என்றும், அவற்றின்  திறன்களை வளர்க்க  தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார். "கடல்சார் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் முயற்சி தொடர்கிறது என்றாலும், அதன் நலன்கள் வேறு எந்த நாட்டுடனும் முரண்படவில்லை. அதேசமயம், வேறு எந்த நாட்டின் நலன்களும் மற்ற நாடுகளுடன் முரண்படக் கூடாது. இந்த உணர்வுடன்தான் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி தனது உரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு கடல் பகுதிகள், குறிப்பாக இந்தியா-பசிஃபிக் பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். இந்தியாவின் கடல்சார் கொள்கையான சாகர், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் கூட்டு வளம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த நிலையை அடைவதற்கான முக்கிய வழிமுறையாக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், தேசிய கடல்சார் அறக்கட்டளை (என்.எம்.எஃப்) வெளியிட்ட 'கடல்சார் இந்தியா: தற்காலிக மற்றும் இடம் சார்ந்த தொடர்ச்சி' என்ற புத்தகத்தை பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார். முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான்; ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி; விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் .பி. சிங், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிந்தனையாளர்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு, மூன்று நாள் மாநாடு 2024, அக்டோபர் 03  அன்று  தொடங்கியது. 'இந்தோ-பசிபிக்கில் வளம்-புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு' என்பது இதன்  கருப்பொருளாகும். 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய கடல்சார் அறக்கட்டளை இந்தியாவின் முன்னணி கடல்சார் சிந்தனைக் குழுக்களில் ஒன்றாகும்இது இந்தியாவின் கடல்சார் நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் தனது ஆராய்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062068 

***


(Release ID: 2062154) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi , Marathi