பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி சென்னை வியக்கும் வகையில் இந்திய விமானப் படை விமான சாகசக் காட்சிக்குத் தயாராகிவருகிறது
Posted On:
21 SEP 2024 12:45PM by PIB Chennai
இந்திய விமானப்படை தனது 92வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2024-ம் ஆண்டு அக்டோபர் 6 அன்று தமிழ்நாட்டின் வான்பகுதியில் விமான சாகசக் கண்காட்சியை நடத்த உள்ளது. இந்த ஆண்டு நிகழ்வு "இந்திய விமானப்படை - திறன், வலிமை, தற்சார்பு" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. இது நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.
சென்னை மக்கள் அன்றைய தினம் மெய்சிலிர்க்கும் காட்சியைக் காண்பார்கள். இந்திய விமானப்படையிலிருந்து 72 விமானங்களின் கண்கவரும் ஏரோபாட்டிக் சாகசங்களையும் ஒத்திசைவான முறையில் விமானங்கள் பறப்பதையும் காண்பார்கள். இந்த நிகழ்வு புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்குத் தொடங்கும். ஏற்கனவே இத்தகைய நிகழ்வு, 08 அக்டோபர் 23 அன்று பிரயாக்ராஜில் உள்ள சங்கம் வான் பகுதியில் நடத்தப்பட்டது. இது லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இம்முறையும் அதேபோன்ற வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானக் கண்காட்சி, இந்திய விமானப்படையின் உயர்நிலை அணிகளில், வானில் கரணம் அடிக்கும் திறமைக்குப் பெயர் பெற்ற ஆகாஷ் கங்கா, நெருந்கிச் செல்லும் சாகசத்திற்குப் புகழ் பெற்ற சூர்யகிரண், அசத்தலான வான்வழி நடனக் குழுவாக விளங்கும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்.
இந்தச் சிறப்புமிக்க அணிகளுடன், தேசத்தின் பெருமையான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நவீன இலகுரக போர் விமானம் தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த், டகோட்டா & ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்கள் ஆகியவை அணிவகுப்பு மற்றும் வான்வழி சாகசக் காட்சிகளில் பங்கேற்கும்.
2024, அக்டோபர் 6 அன்று மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான விமானப்படைக் கண்காட்சியை அனைவருக்கும் பார்வையிடலாம். இந்த நிகழ்வானது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம். இது இந்திய ராணுவத்தின் விமானப் படை சிறப்பை மட்டுமல்ல, அதன் வலிமையையும் திறன்களையும், நாட்டின் வானத்தைப் பாதுகாப்பதில் அதன் பங்கையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.
*****
SMB/ KV
(Release ID: 2059899)
Visitor Counter : 101