நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையே தாஷ்கண்டில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 27 SEP 2024 3:51PM by PIB Chennai

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் உஸ்பெகிஸ்தான் துணைப் பிரதமர் திரு. கோட்ஜாயெவ் ஜாம்ஷித் அப்துகாகிமோவிச் ஆகியோர் தாஷ்கண்டில் இன்று கையெழுத்திட்டனர்.

இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் முதலீட்டாளர்களுக்கும், உஸ்பெகிஸ்தான் குடியரசில் உள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கும் உரிய சர்வதேச முன்னோடிகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உரிய பாதுகாப்பை உறுதி செய்கிறது. குறைந்தபட்ச தரமான நடத்தும் விதம் மற்றும் பாரபட்சமின்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது மேம்படுத்துவதுடன், நடுவர் தீர்ப்பு மூலம் தகராறுகளுக்குத் தீர்வு காண சுதந்திரமான அமைப்பையும் அளிக்கும்.

முதலீடுகள் கையகப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, இடமாற்றங்கள் மற்றும் இழப்பீடு ஆகியவற்றிற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. எவ்வாறாயினும், அத்தகைய முதலீட்டாளர் மற்றும் முதலீட்டு பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையைப் பொறுத்தவரை சமநிலை பராமரிக்கப்படுகிறது.

இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், மேலும் வலுவான மற்றும் நெகிழ்திறன் கொண்ட முதலீட்டுச் சூழலை உருவாக்குவதிலும் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கவும், இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு பயனளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

***

PKV/RR/DL


(Release ID: 2059563) Visitor Counter : 66