நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024, செப். 24 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 23 SEP 2024 6:35PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 செப்டம்பர் 24 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். மத்திய நிதியமைச்சர் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

இப்பயணத்தின் போது, 2024-ம் ஆண்டு செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் சமர்கண்டில் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆளுநர்கள் குழுவின் ஒன்பதாவது வருடாந்திர கூட்டத்தில் சீதாராமன் கலந்து கொள்கிறார், மேலும் உஸ்பெகிஸ்தான், கத்தார், சீன நிதியமைச்சர்கள் மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தலைவர் ஆகியோருடன் முக்கிய இருதரப்பு சந்திப்புகளிலும் கலந்து கொள்கிறார்.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வருடாந்திர கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் இந்திய ஆளுநராக பங்கேற்பார். வங்கியின் இரண்டாவது பெரிய பங்குதாரராக இந்தியா உள்ளது. இப்பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது, ​​மத்திய நிதியமைச்சர் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். மத்திய நிதி அமைச்சர் மற்றும் உஸ்பெகிஸ்தான் முதலீடு, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோர் கையெழுத்திடுவார்கள். நீண்ட கால அடிப்படையில் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக மேலும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் இந்தியா-உஸ்பெகிஸ்தான் வர்த்தக மன்ற விவாதங்களில் பங்கேற்பார். மேலே உள்ள நிகழ்வுகள் தவிரசமர்கண்ட் மாநில பல்கலைக்கழகம் மற்றும் தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவுச் சின்னத்தையும்  திருமதி நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார்.

***

IR/AG/DL


(Release ID: 2058004) Visitor Counter : 47