சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக உணவு ஒழுங்குமுறை அமைப்புகளின் உச்சிமாநாடு 2024-ன் சின்னம், துண்டு பிரசுரங்கள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா வெளியிட்டார்
Posted On:
17 SEP 2024 5:14PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் - குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா நிர்மான் பவனில் உலக உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாடு (GFRS) 2024-ன் சின்னம், துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். இந்த உச்சிமாநாடு 2024 செப்டம்பர் 19 முதல் 21 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தால் (எஃப்எஸ்எஸ்ஏஐ- FSSAI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 மாநாட்டின் ஒரு பகுதியாக இது நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய திரு நட்டா, உலக அரங்கில் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். உணவுப் பாதுகாப்பு என்பது நீண்ட காலமாக சர்வதேச முயற்சிகளின் மையமாக உள்ளது என்று அவர் கூறினார். மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த உச்சிமாநாடு உணவு மதிப்பு சங்கிலியில் உணவு பாதுகாப்பு அமைப்புகள், தங்கள் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த கண்ணோட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கு உலகளாவிய தளத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
மாறிவரும் நுகர்வோர் தேவைகளை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்பில் தொடர்ந்து மாற்றங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு ஜே பி நட்டா, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதி செய்வதில் அறிவு பரிமாற்றத்தின் பங்கை வலியுறுத்தினார்.
இது 30 சர்வதேச அமைப்புகள், 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் 2 வது உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடாகும் என அவர் தெரிவித்தார். இதில் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள், இடர் மதிப்பீட்டு அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உட்பட ஏராளமான பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அவர் கூறினார். உச்சிமாநாட்டில் கிட்டத்தட்ட 5,000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனவும் சுமார் 1.5 லட்சம் பேர் மெய்நிகர் முறையில் இணைவார்கள் என்றும் அமைச்சர் திரு ஜேபி நட்டா குறிப்பிட்டார்.
உலக சுகாதார அமைப்பு (WHO), உலக வர்த்தக அமைப்பு (WTO), உணவு - வேளாண்மை அமைப்பு (FAO), கோடக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம், அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு - ஊட்டச்சத்துக்கான கூட்டு நிறுவனம் ஆகியவையும் இதில் பங்கேற்கின்றன.
***
PLM/AG/KR/DL
(Release ID: 2056410)
Visitor Counter : 38