உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமானப் போக்குவரத்து குறித்த தில்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் அறிவிப்பு
சிவில் விமானப் போக்குவரத்து குறித்த 2-வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது
இந்தியாவில், விமானிகளாக 15% பெண்கள் பணியில் உள்ளனர். இது உலகளாவிய சராசரியான 5 சதவீதத்தை விட அதிகம்: பிரதமர்
விமானப் போக்குவரத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய நாடாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
12 SEP 2024 8:49PM by PIB Chennai
சிவில் விமானப் போக்குவரத்துக்கான 2-வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு தில்லி பிரகடனத்துடன் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தில்லி பிரகடனம் பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 29 நாடுகளின் அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதே சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு உட்பட 8 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் (ICAO) இணைந்து செப்டம்பர் 11 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இந்த உயர்மட்டக் கூட்டம் அமைச்சர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்கள், முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும், பிராந்தியத்தில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் வழிவகுத்துள்ளது.
இந்த மாநாட்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் விவாதங்கள், விளக்கக்காட்சிகள் நடைபெற்றன. பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வது, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட விரிவான கட்டமைப்பான தில்லி பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொண்டது இந்த மாநாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் உயர்மட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர்களுடன் இந்தத் துறையில் இந்தியா அடைந்துள்ள தொழில்நுட்ப உள்கட்டமைப்பு முன்னேற்றங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார். இந்தத் துறையை பெண்களையும் உள்ளடக்கியதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியாவில், 15% விமானிகள் பெண்கள் எனவும் இது உலகளாவிய சராசரியான 5%-ஐ விட அதிகமாகும் என்றும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய பிரதமர், விமானப் போக்குவரத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய நாடாக இந்தியா மாறியுள்ளது என்றார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கியப் பங்கை எடுத்துரைத்த அவர், இந்தத் துறையின் மூலம் மக்கள், கலாச்சாரம், வளத்தை இணைப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
ஆசியா முழுவதும் உள்ள புத்தருடன் தொடர்புடைய அனைத்து புனித இடங்களையும் இணைத்து, சர்வதேச புத்த சுற்றுவட்டத்தை உருவாக்கினால், அது சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், பயணிகளுக்கும், தொடர்புடைய நாடுகளுக்கும், அவற்றின் பொருளாதாரங்களுக்கும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமது வரவேற்புரையில், ஐசிஏஓ-வின் 80 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ், 80 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தல் போன்ற முயற்சிகளுடன் நிலைத்தன்மைக்கான பிரதமரின் உறுதிப்பாடு தெளிவாகிறது என்றார். அவரது தொலைநோக்கு தலைமையின் கீழ், 2047-ம் ஆண்டுக்குள் 350-400 விமான நிலையங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா அடைய உள்ளது என அவர் தெரிவித்தார். இது உலகளாவிய விமானப் போக்குவரத்தில் நாட்டை ஒரு முக்கிய அங்கமாக நிலைநிறுத்தும் என அவர் தெரிவித்தார்.
ஐசிஏஓ கவுன்சிலின் தலைவர் திரு சால்வடோர் தமது உரையில், விமானப் போக்குவரத்தின் அடிப்படை அம்சங்களை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு, விமான வழிசெலுத்தல், பாதுகாப்பு, பசுமை விமானப் போக்குவரத்து என அனைத்து அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு வும்லுன்மாங் வுல்னாம், கூட்டு அணுகுமுறை இருந்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான வலுவான பாதையை அமைக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.
விமானப் போக்குவரத்து சவால்களை எதிர்கொள்வதில் சிறிய நாடுகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட பசிபிக் சிறு தீவு வளரும் நாடுகள் தொடர்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து ஐசிஏஓ வழங்கிய விளக்கக்காட்சி உட்பட மாநாட்டின் 2-வது நாள் பல முக்கிய சிறப்பம்சங்களால் நிறைந்திருந்தது. சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய பசிபிக் அமைச்சர்கள் அளவிலான வரைவு பிரகடனம் (தில்லி பிரகடனம்) சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மட்ட விவாதங்களுக்குப் பிறகு அது முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூடுதலாக, ஐசிஏஓ, சிகாகோ மாநாட்டின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இது கடந்த 80 ஆண்டுகளாக சர்வதேச விமானத் தரங்களை வடிவமைப்பதில் அமைப்பின் பங்கை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
***
(Release ID: 2054335)
PLM/RS/KR
(रिलीज़ आईडी: 2054473)
आगंतुक पटल : 140