வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
முக்கிய கனிமங்கள், விநியோகச் சங்கிலி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
11 SEP 2024 6:52PM by PIB Chennai
முக்கியமான கனிம வளங்கள் தயாரிப்பில் தற்சார்பு அடையவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றவும், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வருவதாக, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சிலின் (யு.எஸ்.ஐ.பி.சி) 49வதுவருடாந்திர பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 9/11 தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி, இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திரு கோயல், இந்த தாக்குதல் பயங்கரவாதத்தால் ஏற்படும் ஆபத்துகளை உலகிற்கு நினைவூட்டுவதாக கூறினார். நமது எல்லைகளுக்கு அப்பாலிருந்து ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தால், இந்தியா பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 9/11 தாக்குதல், பிளவுபடுத்தும் போக்குகள், ஆத்திரமூட்டும் மற்றும் போலி பிரச்சாரங்கள் போன்ற செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
9/11 தாக்குதல், அமெரிக்க மக்களின் மிகப்பெரிய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒற்றுமையின் அவசியத்தை நிரூபித்தது என்றும் அவர் மேலும் கூறினார். இதுபோன்ற கோழைத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக திரு கோயல் தெரிவித்தார். இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு 'சீர்திருத்தம்-செயல்திறன்-மாற்றம்' என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். அரசால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கவும், செயல்படவும் உதவும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களை பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவுடன் தாங்கள் பணியாற்றிய அனுபவங்களை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்றவர்களை கேட்டுக் கொண்டார்.
இந்தியாவும் அமெரிக்காவும், இருதரப்பு மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனைகளில், பகிரப்பட்ட நலன்களுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விளைவான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அவர் கூறினார்.
1893-ம் ஆண்டு இதே நாளில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த திரு கோயல், செயற்கை நுண்ணறிவு மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்களின் சகாப்தத்தில், கூட்டாண்மை மற்றும் செழிப்பு குறித்த யு.எஸ்.ஐ.பி.சி உச்சி மாநாட்டின் கருப்பொருளுடன் இந்த உரை ஆழமாக எதிரொலிக்கிறது என்றும் தெரிவித்தார்.
நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை மற்றும் செழிப்பு, இந்த உலகம் ஒரு சிறந்த இடமாக மாற உதவும் என்று கூறிய அவர், உலகளாவிய சகிப்புத்தன்மை, நாடுகளிடையேயான நல்லிணக்கம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த சுவாமி விவேகானந்தரின் போதனைகளை எடுத்துரைத்தார்.
***
MM/RR/KV
(Release ID: 2054140)
Visitor Counter : 31