பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளில் ராணுவம் மற்றும் விமானப்படை பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 09 SEP 2024 1:45PM by PIB Chennai

இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவை தங்கள் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, புதுதில்லியில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் வதோதராவில் உள்ள விரைவு சக்தி விஸ்வவித்யாலயாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு சேவைகளும் சரக்கு போக்குவரத்து துறையில் உயர் நிபுணத்துவத்தைப் பெற உதவும். இது பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் 2021 மற்றும் தேசிய தளவாடக் கொள்கை  2022 அடிப்படையில், தளவாட செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் உள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதை உறுதி செய்யும். தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு திறம்பட பங்களிக்கும்.

 

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறையில் 'தற்சார்பு' தொலைநோக்குடன் ஒத்திசைவாக ஆயுதப்படைகளின் தளவாட போக்குவரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டாண்மை இது என்று விவரித்தார்.

 

தளவாடங்கள் என்பது இனி ஆயுதப்படைகளின் ஆதரவு செயல்பாடு மட்டுமல்ல, ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பில் ஒரு முக்கிய காரணியாக உருவாகி வருகிறது என்று அவர் கூறினார். "ஒரு திறமையான தளவாட அமைப்பு படைகளை விரைவாக அணிதிரட்டுவதிலும், குறைந்த நேரத்தில் சரியான இடத்திற்கு வளங்களை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது படைகள் செயல்படும் நிலைமைகளை மனதில் கொண்டு, துருப்புக்கள், தளவாடங்கள் மற்றும் விநியோகங்களின் தடையற்ற இயக்கம் நமக்கு தேவைப்படுகிறது. அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு மூலம் நமது படைகளின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்கும்" என்று அவர் கூறினார்.

 

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவது என்ற அரசின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் உறுதிபடக் கூறினார். "நமக்கு தளவாட போக்குவரத்து நிபுணத்துவம் தேவைப்பட்டால், விரைவு சக்தி விஸ்வவித்யாலயா போன்ற நமது சொந்த வளங்களிலிருந்து அதன் பயிற்சியைப் பெற வேண்டும். நமக்கு உபகரணங்கள் தேவைப்பட்டால், அதை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். தற்சார்பாக இருப்பதன் மூலம் மட்டுமே வலுவான இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.

 

நிஜ உலக வழக்கு ஆய்வுகள் மூலம் அனுபவ கற்றலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழங்கல் குறித்து, ஆயுதப்படை வீரர்களின் தலைமை, மேலாண்மை மற்றும் செயல்பாட்டு அனுபவம் மூலம், நவீன போர்முறையின் மாறும் தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய தலைமுறை தளவாட நிபுணர்கள் மற்றும் மேலாளர்களை வடிவமைக்க விரைவு சக்தி விஸ்வவித்யாலயா உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

விரைவு சக்தி விஸ்வவித்யாலயா ஆயுதப்படைகளுக்கு அதிநவீன சரக்கு போக்குவரத்து கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்குதாரராக செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், விமானப்படை தளபதி, ராணுவ தளபதி, பாதுகாப்பு செயலாளர், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் விரைவு சக்தி விஸ்வவித்யாலயா துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2053078)

PKV/RR/KR



(Release ID: 2053091) Visitor Counter : 39