பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
சமூக நீதி, சமூகப் பாதுகாப்புடன் கூடிய ஊராட்சிகள் குறித்த தேசிய பயிலரங்கு - மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் பாட்னாவில் 10-ம் தேதி தொடங்கவுள்ளது
மூன்று நாள் தேசிய பயிலரங்கில் 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்
Posted On:
08 SEP 2024 3:17PM by PIB Chennai
மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், 2024 செப்டம்பர் 10 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் சமூக நீதியுடன் கூடிய சமூக ரீதியாக பாதுகாப்பான பஞ்சாயத்துகள் என்ற கருப்பொருளில் மூன்று நாள் தேசிய பயிலரங்கின் தொடக்க விழாவிற்கு தலைமை வகிக்கவுள்ளார். பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் 2024 செப்டம்பர் 10 அன்று இந்த மூன்று நாள் தேசிய பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் சௌத்ரி, திரு விஜய் குமார் சின்ஹா, பீகார் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கேதார் பிரசாத் குப்தா, பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஷ்ரவன் குமார், பீகார் சமூக நலத்துறை அமைச்சர் திரு மதன் சாஹ்னி, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பீகார் அரசின் தலைமைச் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பீகார் அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையுடன் இணைந்து இந்த தேசிய பயிலரங்கை 2024 செப்டம்பர் 10 முதல் 12 வரை பாட்னாவில் ஏற்பாடு செய்கிறது. 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுகிறது. உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளின் 9 கருப்பொருள்களில் ஒன்றான "சமூக ரீதியாக நியாயமான மற்றும் சமூக ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஊராட்சிகள்" என்ற தலைப்பில் இந்த பயிலரங்கு நடைபெறவுள்ளது.
இந்த பயிலரங்கு சமூகத்தை மிகவும் உள்ளடக்கிய, சமத்துவமான, சமூக பாதுகாப்பு வழிமுறைகளுடன் பணியாற்றும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றிணைக்கும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மத்திய அமைச்சகங்கள், துறைகளின் அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகாரிகள், பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொள்வார்கள். சமூக நீதியுடன் சமூக ரீதியான பாதுகாப்புக்கான முன்மாதிரியான நடைமுறைகளைக் கொண்ட ஊராட்சிப் பிரதிநிதிகளும் இந்த மூன்று நாள் தேசிய பயிலரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
***
PLM/DL
(Release ID: 2052975)