பிரதமர் அலுவலகம்
மூன்று வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
31 AUG 2024 2:32PM by PIB Chennai
திரு அஸ்வினி வைஷ்ணவ் உட்பட மத்திய அரசில் உள்ள எனது மதிப்பிற்குரிய சகாக்களே; உத்தரப் பிரதேச ஆளுநர் திரு திருமிகு ஆனந்தி பென் படேல் அவர்களே; தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே; கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் அவர்களே; உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே,; மாநில துணை முதல்வர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!
இன்று, வடக்கிலிருந்து தெற்கு வரை, நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை நாம் காண்கிறோம். இன்று முதல் மதுரை-பெங்களூரு, சென்னை-நாகர்கோவில் மற்றும் மீரட்-லக்னோ வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கம், நவீனத்தை அரவணைத்தல் மற்றும் வந்தே பாரத் ரயில்களின் அதிகரித்த வேகம் ஆகியவை 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நமது நாட்டின் நிலையான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. இன்று தொடங்கப்பட்ட மூன்று வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். கோயில் நகரமான மதுரை இப்போது வந்தே பாரத் வழியாக பெங்களூரின் தகவல் தொழில்நுட்ப மையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்களில் மதுரை மற்றும் பெங்களூரு இடையே பயணிக்கவும், யாத்ரீகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவும். சென்னை - நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயனளிக்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செயல்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் ஏற்கனவே காண்கிறோம். சுற்றுலாவின் இந்த எழுச்சி உள்ளூர் வணிகங்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அதிகரித்த வருமானத்திற்கும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வித்திடுகிறது. இந்த புதிய ரயில்களுக்காக நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய நமது தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி தேவைப்படுகிறது. தென்னிந்தியா திறமை, வளங்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த பிராந்தியமாகும். எனவே, தமிழ்நாடு, கர்நாடகா உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தய பகுதியின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாநிலங்களில் ரயில்வே செய்துள்ள முன்னேற்றம் இந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில், தமிழகத்திற்கான ரயில்களின் பட்ஜெட்டுக்கு ரூ .6,000 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளோம், இது 2014 பட்ஜெட்டை விட 7 மடங்கு அதிகமாகும். தமிழகத்தில் ஏற்கனவே ஆறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்த இரண்டு புதிய ரயில்களையும் சேர்த்து, இப்போது இந்த எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கும். இதேபோல், கர்நாடகாவுக்கு ரூ.7,000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது 2014 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிகம். இன்று, 8 ஜோடி வந்தே பாரத் ரயில்கள் கர்நாடக மாநிலம் முழுவதையும் இணைக்கின்றன.
நண்பர்களே,
கணிசமாக உயர்த்தப்பட்ட பட்ஜெட் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரயில் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த மாநிலங்களில், ரயில் தடங்கள் மேம்படுத்தப்படுகின்றன, மின்மயமாக்கல் திட்டங்கள் நடந்து வருகின்றன, பல ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன. இந்த வளர்ச்சிகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியிருப்பது மட்டுமின்றி, வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கும் வழிவகுத்துள்ளது.
நண்பர்களே,
ரயில்வே, சாலைகள் மற்றும் நீர்வழிகள் போன்ற இணைப்பு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்போது, நாடு வலுவடைகிறது. இந்த வளர்ச்சி சாமானிய குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதை நாடு காண்கிறது. உள்கட்டமைப்பின் விரிவாக்கம் கிராமங்களுக்கு புதிய வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. மலிவான டேட்டா மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு கிடைப்பது கிராமப்புறங்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. மருத்துவமனைகள், கழிப்பறைகள் மற்றும் கான்கிரீட் வீடுகள் சாதனை எண்ணிக்கையில் கட்டப்படுவது, நாட்டின் முன்னேற்றத்தால் ஏழைகளும் பயனடைவதை உறுதி செய்கிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற உள்கட்டமைப்பின் வளர்ச்சி இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்.
நண்பர்களே,
பல ஆண்டுகளாக, இந்திய ரயில்வே நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அயராது உழைத்துள்ளது, இது நீடித்த தீர்வுகளுக்கான நம்பிக்கையை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொருவருக்கும், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வசதியான பயணத்தின் அடையாளமாக இந்திய ரயில்வே மாறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நாடு முழுவதும் நடைபெறும் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு வறுமையை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள், மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050387
****
RB/DL
(Release ID: 2052916)
Visitor Counter : 25
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada