இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2024 6:53PM by PIB Chennai
பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி வெற்றிகரமாகத் திரும்பிய இந்திய பாரா தடகளக் குழு உறுப்பினர்களை மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று பாராட்டினார். இது தொடர்பான நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களை மத்திய அமைச்சர் வாழ்த்தினார்.
விளையாட்டுக் குழுவினரிடையே உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு தமது பாராட்டை வெளிப்படுத்தினார்: "இன்று ஆறு பாராலிம்பிக் அறிமுக விளையாட்டு வீரர்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மதிப்புமிக்க நிகழ்வில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற தீப்திக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். மற்றவர்களுக்கு, எதிர்கால பாராலிம்பிக் போட்டிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மேலும் பதக்கங்களை வருங்காலத்தில் வெல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விளையாடுவது என்பது பதக்கங்களைப் பற்றியது மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கை முன்வைத்த சவால்களை வென்று வெற்றியாளர்களாக வெளிவந்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நீங்கள் அனைவரும் உத்வேகம் அளிக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.
பாராலிம்பிக்கில் அறிமுகமான பெண்கள் 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி, சக அறிமுக தடகள வீரர்கள் ரவி ரோங்காலி (ஆண்கள் ஷாட்புட் எஃப் 40), ரக்ஷிதா ராஜு (பெண்கள் 1500 மீட்டர் டி 11), காஞ்சன் லக்கானி (பெண்கள் வட்டு எறிதல் எஃப் 53), சாக்ஷி கசனா (பெண்கள் வட்டு எறிதல் எஃப் 55), மனு (ஆண்கள் ஷாட்புட் எஃப் 37) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய தீப்தி, "நாட்டுக்காக பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளேன், ஆனால் அடுத்த முறை தங்கம் வெல்ல முயற்சிப்பேன்" என்றார்.
செப்டம்பர் 4-ந் தேதி வரை நடந்த விளையாட்டுப் போட்டிகளின் முடிவில், இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உட்பட மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது.
***
(Release ID: 2052311)
PKV/RR