பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் லக்னோவில் முதல் கூட்டுத் தளபதிகள் மாநாடு

Posted On: 05 SEP 2024 5:10PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டு ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின், இரண்டாவது மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.

தேச நலன்களைப் பாதுகாப்பதிலும், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதிலும், ஆயுதப் படைகளின் விலைமதிப்பற்ற பங்களிப்பை பாராட்டிய அவர், முப்படைகளிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் பாராட்டினார்.

வலிமையான ராணுவம் வளமான பாரதம்: ஆயுதப் படைகளை மாற்றுதல்' என்ற மாநாட்டின் கருப்பொருளுக்கு ஏற்ப, இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும், அமைதியைப் பாதுகாக்க ஆயுதப்படைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார். கூட்டு ராணுவ வலிமையை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வருங்கால போர்களில் நாடு எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு, தயாரிப்பு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அதே நேரத்தில் ஆத்திரமூட்டல்களுக்கு ஒருங்கிணைந்த விரைவான மற்றும் விகிதாசார பதிலடி பற்றியும் வலியுறுத்தினார்.

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் & இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் மற்றும் பங்களாதேஷின் தற்போதைய நிலைமை பற்றி குறிப்பிடுகையில், இந்த அத்தியாயங்களை பகுப்பாய்வு செய்யவும், எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை கணிக்கவும், "எதிர்பாராததை" சமாளிக்கத் தயாராக இருக்குமாறும்  ராணுவ தளபதிகளை பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தினார். வடக்கு எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, உயர்மட்ட இராணுவத் தலைமையின் பரந்த மற்றும் ஆழமான பகுப்பாய்வின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

"உலகளாவிய நிலையற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியா ஒரு அரிய அமைதி நிலையை அனுபவித்து வருகிறது, அது அமைதியாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், அதிகரித்து வரும் சவால்கள் காரணமாக, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அமிர்த காலத்தின் போது நாம் நமது அமைதியை அப்படியே வைத்திருப்பது முக்கியம். நாம் நமது நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும், தற்போது நம்மைச் சுற்றி நடக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும், எதிர்காலம் சார்ந்ததாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, நமக்கு வலுவான தேசிய பாதுகாப்பு உத்தி இருக்க வேண்டும். தோல்வி-தடுப்பு  பொறுமையை நாம் பின்பற்ற வேண்டும்" என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆயுதப்படை ஆயுதக் கிடங்கில், பாரம்பரிய மற்றும் நவீன போர் உபகரணங்களின் சரியான கலவையை அடையாளம் கண்டு, தேவையானதை சேர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ராணுவ தளபதிகளை கேட்டுக் கொண்டார். விண்வெளி மற்றும் மின்னணு போர்முறைகளில் திறன் மேம்பாடு குறித்து வலியுறுத்திய அவர், நவீன கால சவால்களை சமாளிக்க அவை ஒருங்கிணைந்தவை என்று விவரித்தார். தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், ராணுவத் தலைமை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "இந்த அம்சங்கள் எந்தவொரு மோதலிலும் அல்லது போரிலும் நேரடியாக பங்கேற்கவில்லை. அவர்களின் மறைமுக பங்கேற்பு, போரின் போக்கை பெருமளவில் தீர்மானிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட திரு ராஜ்நாத் சிங், இந்தத் துறையை வலுப்படுத்தவும், ஆயுதப்படைகளுக்கு அதிநவீன உள்நாட்டு ஆயுதங்களை வழங்குவதென்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அரசு உறுதியுடன் இருப்பதாக அவர் மீண்டும்  உறுதிபட தெரிவித்தார்.

செப்டம்பர் 04, 2024 அன்று தொடங்கிய இந்த மாநாடு, நாட்டின் ஒருங்கிணைந்த உயர்மட்ட இராணுவத் தலைமையை ஒன்றிணைத்தது. அவர்கள் தேசிய பாதுகாப்பு சூழலில் தேசத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதித்தனர். கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த பதிலடிக்கான அமைப்பு ரீதியான கட்டமைப்புகள், அமைதி மற்றும் போர்க் காலங்களில் வேலை நடைமுறையில், செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்கால திறன் மேம்பாடு குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தன்னாட்சி ஆயுத அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்ற சமகால பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

நவீன போரில் இணைய மற்றும் விண்வெளி அடிப்படையிலான போர்முறையின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. இது பல போர்க் களங்களில் எதிர்கால மோதல்களுக்கு தயாராக வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் அதே வேளையில், இந்தியாவை பாதிக்கும் தேசிய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்ய தளபதிகளுக்கு இந்த மாநாடு ஒரு வாய்ப்பை வழங்கியது.

-அருங்காட்சியகம், -கிரந்தாலயா உள்ளிட்ட எட்டு புதுமையான செயலிகளையும், 'காலனித்துவ நடைமுறைகள் மற்றும் ஆயுதப் படைகள் ஒரு ஆய்வு' என்ற ஒரு வெளியீட்டையும் பாதுகாப்பு அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இது முப்படைகளுக்கிடையில் அதிக ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவை நோக்கிய குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே, செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு சஞ்சீவ் குமார், செயலாளர் (முன்னாள் படைவீரர் நலன்) டாக்டர் நிதின் சந்திரா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், நிதி ஆலோசகர் (பாதுகாப்பு சேவைகள்) திரு. சுகதா கோஷ் தஸ்திதார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

MM/AG/DL



(Release ID: 2052355) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Marathi