வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம் செய்வதை எளிதாக்க ஒற்றைச் சாளர நடைமுறை முக்கியமானது: மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
05 SEP 2024 4:32PM by PIB Chennai
நாட்டில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உண்மையான அறிவார்ந்த ஒற்றைச் சாளர நடைமுறை முக்கியமானது என்று மத்திய வர்த்தகம் - தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். தில்லி யசோபூமியில் இன்று நடைபெற்ற மாநிலங்களின் தொழில் - வர்த்தக அமைச்சர்களின் 'உத்யோக் சமகம்' மாநாட்டிற்கு தலைமை வகித்து அவர் பேசிய போது இதனைத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒப்புதல்களுக்கு ஒரே தளத்திற்கு வந்தால், அது ஒவ்வொரு மாநிலத்திலும் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும் என்று அவர் கூறினார்.
மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கான ஒப்புதல்கள் குறித்த காலக்கெடுவுக்குள், எளிதாக வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மத்திய அரசும், மாநில அரசுகளும் அனைத்துத் துறைகளிலும் இணைந்து பணியாற்றி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டவர்களைப் பாராட்டிய அமைச்சர், எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்துவதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சிறப்பான பணிகளையும் பாராட்டினார்.
பல மாநிலங்கள் தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், ஆரோக்கியமான போட்டியும் ஒத்துழைப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார். ஒடிசா சுரங்கத் துறையை சீர்திருத்தியுள்ளது எனவும், உத்தரப்பிரதேசம் முதலீட்டை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது எனவும், மகாராஷ்டிரா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சிக்கிம் இயற்கை விவசாயத்திற்கு மதிப்பு சேர்க்கிறது என அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களின் தொழில் கொள்கைகளை ஆய்வு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் அறிவுறுத்தினார்.
உலகின் முதலீட்டு மையமாக இந்தியாவை மேம்படுத்தவும், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும் அரசு நேர்மறையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமமான வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.
16 மாநிலங்களைச் சேர்ந்த தொழில், வர்த்தக அமைச்சர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
------------
PLM/RS/DL
(Release ID: 2052348)
Visitor Counter : 56