வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மும்பையிலிருந்து மெல்போர்னுக்கு இந்திய மாதுளைகளை அனுப்ப ஏபிஇடிஏ ஏற்பாடு

Posted On: 05 SEP 2024 3:13PM by PIB Chennai

வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), 2024, ஆகஸ்ட் 31 அன்று மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு இந்திய மாதுளையின் முதல் சரக்குப் பெட்டகத்தை  ஏற்றுமதி செய்ய உதவியது.

இந்த வெற்றிகரமான ஏற்றுமதி, உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் திறன்களை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், வருவாய்க்கான  புதிய வாய்ப்புகளாக திறப்பதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தையும் வழங்குகிறது. இந்த சரக்கு மெல்போர்னில் வெற்றிகரமாக இறக்கப்பட்டதுடன், APEDA இந்தியா அரங்கில் ஃபைன் ஃபுட் ஆஸ்திரேலியா 2024-ல் காட்சிப்படுத்தப்பட்டது, இது இந்திய மாதுளை  மீதான  உலகளாவிய வரவேற்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

ஆஸ்திரேலியா, 2020-ம் ஆண்டில் இந்திய மாதுளைகளுக்கு சந்தை அணுகலை வழங்கியது, இது இந்திய விவசாயிகளுக்கு ஒரு புதிய மற்றும் லாபகரமான சந்தையை  அணுக வழி வகுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு மாதுளைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு செயல் திட்டம் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) பிப்ரவரி 2024-ல் கையெழுத்திடப்பட்டன, இது ஏற்றுமதி செயல்முறையை மேலும் ஒழுங்குபடுத்துகிறது.

தோட்டக்கலை பயிர்களின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இருக்கும் இந்தியாவில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாதுளை அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்கவும், விநியோகச் சங்கிலி தடைகளை நீக்கவும், குறிப்பாக மாதுளைகளுக்காக ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகளை (EPF) APEDA நிறுவியுள்ளது. இந்த அமைப்புகளில் வர்த்தகத் துறை, வேளாண் துறை, மாநில அரசுகள், தேசிய பரிந்துரை ஆய்வகங்கள் மற்றும் முதல் பத்து முன்னணி ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள் உள்ளனர், இது மாதுளை ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் கூட்டு முயற்சியை உறுதி செய்கிறது.

2023-24 நிதியாண்டில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, பஹ்ரைன் மற்றும் ஓமான் உள்ளிட்ட சந்தைகளுக்கு 69.08 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 72,011 மெட்ரிக் டன் மாதுளையை இந்தியா ஏற்றுமதி செய்தது.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மை கொண்டவை என்றாலும், அவற்றின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான APEDA-வின் அர்ப்பணிப்பு, நீண்ட தூர இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் போது தயாரிப்பு பண்புகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான கடல் நெறிமுறைகளை உருவாக்குவதில் தெளிவாகிறது. இந்த முயற்சி உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நிலையான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கிறது.

மும்பையைச் சேர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் முன்னணி ஏற்றுமதியாளரும், APEDA-வில் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளருமான கே பீ எக்ஸ்போர்ட்ஸ் இந்த சரக்கை அனுப்பியது. இந்த சரக்கில் உள்ள மாதுளைகள் கே பீ எக்ஸ்போர்ட்ஸ், பண்ணைகளிலிருந்து நேரடியாக பெறப்பட்டன, இந்த ஏற்றுமதியின் நன்மைகள் அடிமட்டத்தில் உள்ள, இந்திய விவசாயிகளை சென்றடைவதை உறுதி செய்தது. இந்த மாதுளைகள் அகமதுநகரில் உள்ள ஆஸ்திரேலியாவால் அங்கீகரிக்கப்பட்ட பேக்ஹவுஸில் உன்னிப்பாக பேக் செய்யப்பட்டன, அவை சர்வதேச சந்தைகளுக்குத் தேவையான கடுமையான தரங்களை பூர்த்தி செய்வதாக உத்தரவாதம் அளித்தன. 1.1 மெட்ரிக்டன் (MT) எடையுள்ள சரக்குகள் 336 பெட்டிகளைக் கொண்டிருந்தன (ஒவ்வொன்றும் 3.5 கிலோ எடையுள்ளவை).

APEDA என்பது மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். மேலும் இது. இந்திய வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் வர்த்தகர்களுக்கு இடையேயான கண்காட்சிகளை நடத்துவது, புதிய வாய்ப்புள்ள சந்தைகளை கண்டறிவது, இயற்கை மற்றும் புவிசார் குறியீடு (ஜிஐ) இடப்பட்ட வேளாண் பொருட்களை ஊக்குவிப்பதற்காக, இந்திய தூதரகங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது ஆகியவை அவர்களின் முயற்சிகளில் அடங்கும்.

***

MM/AG/DL



(Release ID: 2052335) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Marathi , Hindi