ஜவுளித்துறை அமைச்சகம்

இந்தியாவின் ஜவுளித் தொழில் துறை 2030-ம் ஆண்டுக்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உயரும் - 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்

Posted On: 04 SEP 2024 6:09PM by PIB Chennai

இந்தியாவின் ஜவுளித் தொழில் துறை 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உயரும் என்றும் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று (04.09.2024) நடைபெற்ற 'பாரத் டெக்ஸ் 2025' தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இதனைத் தெரிவித்தார்.

மத்திய ஜவுளி மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, ஜவுளித் துறை செயலர் திருமதி ரச்னா ஷா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜவுளித் தொழிலுக்கான மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம், ஆடைத் தொழிலின் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.

பாரத் டெக்ஸ் 2025 என்பது ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் ஒரு உலகளாவிய ஜவுளி நிகழ்வாகும். 2025 பிப்ரவரி 14 முதல் 17,  வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, பாரத் டெக்ஸ் 2025 உலகளாவிய அளவிலான ஜவுளி வர்த்தக கண்காட்சி, அறிவுசார் தளமாக அமையும்.

இந்த நிகழ்வு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் ஆகிய இரண்டு  இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறும். முக்கிய நிகழ்வு 2025 பிப்ரவரி 14 முதல் 17 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறும். கண்காட்சி 2025 பிப்ரவரி 12 முதல் 15 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் காட்சிப்படுத்தப்படும்.

பாரத் டெக்ஸ் கண்காட்சியில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தரை உறைகள், இழைகள், நூல்கள், துணிகள், தரைவிரிப்புகள், பட்டு, ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்கள், தொழில்நுட்ப ஜவுளிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும்.

பாரத் டெக்ஸ் 2025-க்கான அறிமுக நிகழ்ச்சியில் தொழில்துறை சங்கங்கள், ஜவுளித் துறை பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாரத் டெக்ஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் www.bharat-tex.com என்ற இணையதளத்தில் உள்ளது.

----

PLM/KPG/DL



(Release ID: 2051892) Visitor Counter : 32