பாதுகாப்பு அமைச்சகம்
ஹிம்-ட்ரோன்-அ-தோன்-2, ஹிம்டெக்-2024 நிகழ்வுகள்: உயர்ந்த மலைப் பகுதிகளில் ட்ரோன்கள் பயன்பாடு குறித்த செயல்விளக்க நிகழ்ச்சியை ராணுவம் நடத்துகிறது
Posted On:
04 SEP 2024 3:09PM by PIB Chennai
இந்திய ராணுவம் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை நடத்துகிறது. ஹிம்-ட்ரோன்-அ-தோன்-2 (HIM-DRONE-A-THON-2), ஹிம்டெக்-2024 (HIMTECH-2024) என்ற இரு மைல்கல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. அதிக உயரமான பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து இவற்றில் செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஹிம்-ட்ரோன்-அ-தோன்-2 (HIM-DRONE-A-THON 2), 2024 செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் லேவுக்கு அருகிலுள்ள வாரி லாவில் நடைபெறும். அதைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் 20, 21 தேதிகளில் ஹிம்டெக் -2024 (HIMTECH-2024) நடைபெறும்.
இது தொடர்பாக ராணுவ வடிவமைப்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் சி.எஸ்.மான் கூறுகையில், "சியாச்சின் பனிப்பாறை முதல் இமயமலை வரை இந்திய ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு வீரர்கள் தினமும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற உயரமான போர்க்களங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரர்களுக்கு உதவுவது குறித்து இந்த நிகழ்ச்சிகளில் செயல்விளக்கங்கள் இடம்பெறும்." என்று கூறினார்.
ஹிம்-ட்ரோன்-அ-தோன்-2 அதிக உயரமான பகுதிகளுக்கு இந்திய ராணுவத்திற்கான ட்ரோன் தீர்வுகளில் கவனம் செலுத்தும். இந்த நிகழ்வு 4000 முதல் 5000 மீட்டர் உயரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அனைத்து உள்நாட்டு ட்ரோன் உற்பத்தியாளர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்வில் பங்கேற்க இதுவரை 25-க்கும் மேற்பட்ட ட்ரோன் உற்பத்தி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அனைத்து நிறுவனங்களும் தங்கள் தகுதி, திறன்களை நிரூபிக்க மிக உயரமான பகுதியில் பன்முக போட்டியில் ஈடுபடும்.
ஹிம்டெக் -2024 (HIMTECH 2024) முதல் முறையாக லேவில் நடைபெறுகிறது. இது வடக்கு எல்லைகளில் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னிலைப்படுத்த நடத்தப்படுகிறது. இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. நவீன ஆளில்லா அமைப்புகள், பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த இந்திய தொழில்துறையினருக்கு இந்த நிகழ்வு ஒரு தளத்தை வழங்கும்.
----
PLM/KPG/KR/DL
(Release ID: 2051814)
Visitor Counter : 61