இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நிதேஷ் குமார்

Posted On: 03 SEP 2024 4:03PM by PIB Chennai

இந்திய பாரா-பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார், பாரிஸ் 2024 பாராலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் SL3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இது, ஓரு கால் அல்லது இரண்டு கால்களிலும் குறைபாடு மற்றும் மோசமான நடைபயிற்சி அல்லது ஓட்ட சமநிலையில் குறைபாடு உடைய விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவாகும். 29 வயதான அவர் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்த மூன்றாவது இந்தியரானார். தனது அனைத்து போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம், போட்டி முழுவதும் குறைகூற முடியாத செயல்திறனை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் நிதேஷ் 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டேனியல் பெத்தலை வீழ்த்தினார். 2024 பாராலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் வீரர் அவனி லெக்ராவின் முந்தைய வெற்றியைத் தொடர்ந்து இவரது வெற்றி இந்தியாவுக்கு இரண்டாவது தங்கத்தைப் பெற்றுத் தந்தது.

தொடக்கங்களும் திருப்புமுனைகளும்

டிசம்பர் 30, 1994 இல் பிறந்த நிதேஷ் குமார், ஹரியானாவின் சர்கி தாத்ரியைச் சேர்ந்தவர். தற்போது ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல் 3 பிரிவில் உலகின் நம்பர் 1 தரவரிசையில் உள்ளார். அவரது பயணம், கல்வி, விளையாட்டு இரண்டிலும் அசாதாரண அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ..டி-மண்டியில் மின் பொறியியல் பட்டம் பெற்ற நிதேஷின் விளையாட்டு ஆர்வம், குழந்தைப் பருவத்தில் கால்பந்துடன் தொடங்கியது. இருப்பினும், 2009-ல் வாழ்க்கையை மாற்றிய ஒரு விபத்து, அவரது காலில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், விளையாட்டு மீதான அவரது காதல் நீடித்தது, குறிப்பாக ..டி-மண்டியில் படித்த காலத்தில், அவர் பேட்மிண்டனில் அதீத ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

 

பாரா விளையாட்டில் நிதேஷின் பயணம், உடல்திறன் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான மாநாட்டில் தொடங்கியது. இது போட்டி விளையாட்டு உலகில் அவருக்கு புதிய கதவுகளைத் திறந்தது. 2016 -ம் ஆண்டில், ஹரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஃபரிதாபாத்தில் நடந்த பாரா தேசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகமாகி வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு, பெங்களூரு பாரா தேசிய விளையாட்டு ஒற்றையர் பிரிவில் வெள்ளி மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று பாரா-பேட்மிண்டனில் தனது நற்பெயரை உறுதிப்படுத்தினார்.

அவரது உள்நாட்டு வெற்றி 2020 தேசிய போட்டிகளில் உச்சத்தை அடைந்தது. அங்கு அவர் டோக்கியோ பாராலிம்பிக் பதக்கம் வென்ற பிரமோத் மற்றும் மனோஜ் ஆகியோரை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். நிதேஷ் பல சர்வதேச பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவரது தனித்துவமான பயணம், இப்போது அவரை பாராலிம்பிக்கின் பிரமாண்டமான அரங்கிற்கு அழைத்துச் சென்று, தனது அடையாளத்தை உருவாக்கத் தயாராக உள்ளது.

பாரா பேட்மிண்டன் போட்டியில் வெற்றி

நிதேஷ் குமார், இந்தியாவின் முதன்மையான பாரா-பேட்மிண்டன் வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினார். பல்வேறு மதிப்புமிக்க போட்டிகளில் அவரது பயணம் தொடர்ச்சியான சாதனைகளால் குறிக்கப்பட்டுள்ளது, இது விளையாட்டின் மீதான அவரது நிலையான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

அரசாங்க ஆதரவு மற்றும் உதவி

பாரா பாட்மிண்டன் போட்டியில் நிதேஷ் குமார் சாதிக்க, அரசுத் தரப்பில் முக்கிய ஆதரவு கிடைத்துள்ளது. இந்த உதவியில் அவரது செயல்திறனுக்கு இன்றியமையாத செயற்கை கால் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் செயற்கை உறுப்புகளுக்கான நிதி உதவியும் அடங்கும். கூடுதலாக, அவர் தனது பயிற்சி மற்றும் போட்டி செலவுகளுக்கு நிதி ஆதரவைப் பெற்றுள்ளார். இது நிதி கட்டுப்பாடுகள் இல்லாமல் தனது விளையாட்டில் கவனம் செலுத்த உதவுகிறது. மேலும், ஒலிம்பிக் போடியம் இலக்கு திட்டத்தின் (TOPS) கீழ் கையில் உள்ள பணத்தை செலவழிக்காமல் பயனடைகிறார். இது அவரது துறையில் சிறந்து விளங்க தேவையான வளங்களை வழங்குகிறது.

முடிவு

பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் நிதேஷ் குமாரின் வரலாற்று தங்கப் பதக்கம் இந்திய பாரா-பேட்மிண்டனில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதுடன், அவரது அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையை மாற்றும் விபத்தை சமாளிப்பதில் இருந்து, உலகத் தரம் வாய்ந்த தடகள வீரராக மாறுவதற்கான அவரது பயணம், அவரது எழுச்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அண்மையில் பாரிஸில் அவர் பெற்ற வெற்றி உட்பட அவர் பெற்ற தொடர்ச்சியான பாராட்டுகள், அவரது தனித்துவமான திறமையை மட்டுமல்ல, அரசாங்கத்திடமிருந்து அவருக்கு கிடைத்த வலுவான ஆதரவையும் எடுத்துக்காட்டுகிறது. நிதேஷின் வெற்றி தனிப்பட்ட வெற்றியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எதிர்கால தலைமுறை பாரா-தடகள வீரர்களுக்கும் ஊக்கமளிக்கிறது. விளையாட்டு சிறப்பின் உச்சத்தை அடைவதில் விடாமுயற்சி மற்றும் ஆதரவின் முக்கியப் பங்கை அவரது சாதனைகள் எடுத்துக்காட்டுகின்றன.

***

MM/AG/KR/DL


(Release ID: 2051385)
Read this release in: English , Urdu , Hindi , Kannada