பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடலோர காவல்படையின் முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்ரா பிரதாப்' கோவாவில் பாதுகாப்பு இணை அமைச்சர் முன்னிலையில் சேவையை தொடங்கியது
Posted On:
29 AUG 2024 6:21PM by PIB Chennai
பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பு பெற்ற நாடாக மட்டுமின்றி, நிகர ஏற்றுமதியாளராகவும் நாடு மாற, தொழில்துறை பங்குதாரர்கள் பாடுபட வேண்டும் என்று, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வலியுறுத்தியுள்ளார். 2024 ஆகஸ்ட் 29 அன்று கோவாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலை (சமுத்ரா பிரதாப்) அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அவர் பேசினார். இந்திய கடலோர காவல்படைக்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனம் இந்தக் கப்பலை கட்டியுள்ளது. இந்தக் கப்பல் நாட்டின் கடலோரப் பகுதியில் எண்ணெய் கசிவைத் தடுக்க உதவும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில், திருமதி நீதா சேத் இந்த கப்பலுக்கு 'சமுத்ர பிரதாப்' என்று பெயரிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழ் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் கூறினார். பாதுகாப்புத் தேவைகளுக்காக கப்பல் கட்டுவதில், நமது நாடு தற்சார்பு நாடாக மாறியிருப்பதும், பிற நாடுகளுக்காக கப்பல்களைக் கட்டத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய கடலோர காவல்படைக்கு ரூ.583 கோடி செலவில், இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் தளமான ஜி.எஸ்.எல் கையெழுத்திட்டது. இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 114.5 மீட்டர் நீளமும், 16.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், 4170 டன் எடையை இடப்பெயர்ச்சி செய்யும். கப்பலின் கீல் நாட்டும் விழா 21 நவம்பர் 2022 அன்று நடைபெற்றது.
தொடக்க விழாவில், கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரஜேஷ் குமார் உபாத்யாயா மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
'சமுத்ரா பிரதாப்' நாட்டின் கப்பல் கட்டும் திறன்களுக்கு ஒரு முன்மாதிரியான சான்றாகும், மேலும் அதிநவீன மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட இந்திய கப்பல் கட்டும் தளங்களின் கூட்டமைப்பிற்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தைக் கொண்டு செல்கிறது.
----
MM/KPG/DL
(Release ID: 2049899)
Visitor Counter : 87