அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த மருந்தின் அளவை சீராக்கும் புதிய ஸ்மார்ட் சென்சார்

Posted On: 27 AUG 2024 2:44PM by PIB Chennai

பார்கின்சன் நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த செலவில், எளிதாக பயன்படுத்தத் தக்க, செல்பேசி அடிப்படையிலான புதிய ஸ்மார்ட் சென்சார் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சென்சார், உடலில் எல்-டோபாவின் அளவை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். இதன் மூலம் இந்த நோயை தீவிரமாக கட்டப்படுத்துவதற்கு தேவையான மருந்தின் அளவை தீர்மானிக்க முடியும்.

நமது உடலில் உள்ள நியூரான் செல்கள் தொடர்ந்து குறைவதால், டோபமைன் அளவு கணிசமாக குறைகிறது. இதனால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. எல்-டோபா எனும் வேதிப்பொருள் நமது உடலில் டோபமைனாக மாற்றப்பட்டு பார்கின்சன் நோய்க்கு எதிரான மருந்தாக செயல்படுகிறது.

டோபமைன் குறைபாட்டை ஈடு செய்ய இது உதவுகிறது. எல்-டோபா சரியான அளவில் நிர்வகிக்கப்படும் வரை நோயும் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும், பார்கின்சன் நோயின் அளவையும் நோயாளியின் வயதையும் பொருத்து நியூரான்களின் இழப்பை ஈடு செய்ய அதிகப்படியான எல்-டோபா தேவைப்படுகிறது.

இருப்பினும், மிக அதிகப்படியான எல்-டோபாவை பயன்படுத்துவது, இரப்பை அழற்சி, மனநோய், சித்தப்பிரமை, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளுக்கு காரணமாகிறது. எல்-டோபா அளவு மிகவும் குறைவது, பார்கின்சன் நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.

சிகிச்சையில் எல்-டோபா அளவின் முக்கியத்துவம் கருதி, எளிதாக, குறைந்த செலவில் அதனை கண்காணிக்கும் முறை கண்டறியப்படுவது அவசியமானது. இதையடுத்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நவீன அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் அண்மையில் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் முறை ஒன்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049045

 

SMB/RS/DL  

***


(Release ID: 2049195) Visitor Counter : 79