விவசாயத்துறை அமைச்சகம்
பயிர் உற்பத்தி புள்ளிவிவர மேம்பாடு குறித்த தேசிய மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சகம் புதுதில்லியில் நடத்தியது
प्रविष्टि तिथि:
22 AUG 2024 4:08PM by PIB Chennai
கொள்கை உருவாக்கம், வர்த்தக முடிவுகள், வேளாண் திட்டமிடல் ஆகியவற்றிற்கு முக்கியமான வேளாண் புள்ளிவிவரங்கள் அவசியம். புள்ளிவிவரங்களின் துல்லியம், நம்பகத்தன்மை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய வேளாண் அமைச்சகம் புதுதில்லியில் தேசிய மாநாட்டை நடத்தியது.
நாடு முழுவதும் வேளாண் புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேளாண் துறைச் செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடில், பயிர் உற்பத்தி தரவுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த தொலையுணர்வு, ஜியோஸ்பேஷியல் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. விண்வெளித் துறையைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தி முன்னறிவிப்பு, வேளாண் வானிலை ஆய்வு, நிலம் சார்ந்த கணிப்புகளை மேற்கொள்வதன் மூலம் பயிர் உற்பத்தி புள்ளிவிவரங்களை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தைப் புகுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
மகசூல் முன்னறிவிப்புகளைப் பொறுத்தவரை, விண்வெளி பயன்பாட்டு மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய புள்ளியியல் நிறுவனம், இந்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம், பொருளாதார வளர்ச்சி நிறுவனம் போன்ற பல்வேறு சிறப்பு முகமைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களின் மகசூல் மதிப்பீடுகளை உருவாக்க பல்வேறு மாதிரிகளில் செயல்படும்.
வேளாண் புள்ளிவிவரங்களின் தரத்தை மேம்படுத்தும் இலக்கை அடைய மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தை செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி வலியுறுத்தினார். இந்த புதிய முன்முயற்சிகளை மாநிலங்கள் உரிய நேரத்தில் மேற்கொண்டு அவற்றை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
***********
(Release ID: 2047679)
(रिलीज़ आईडी: 2048006)
आगंतुक पटल : 83