பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னையில் புதிய அதிநவீன கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையக் கட்டிடத்தைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

Posted On: 18 AUG 2024 6:48PM by PIB Chennai

சென்னையில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையக் கட்டிடத்தைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024, ஆகஸ்ட் 18 அன்று திறந்து வைத்தார். சென்னைத் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய கடல் மாசு தடுப்பு மையத்தையும் புதுச்சேரியில் கடலோரக் காவல்படை விமானம்  நிறுத்துமிடத்தையும் அவர் காணொலிக் காட்சி  மூலம் தொடங்கி வைத்தார். வலுவான கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசரமான காலங்களில் திறமையான பணிகளை வழங்குவதற்கும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் இந்த கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்

இந்த அதிநவீன வசதி, கடலில் ஆபத்துக்குள்ளான மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கான மீட்புப் பணிகளின் ஒருங்கிணைப்பையும்  செயல்திறனையும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நெருக்கடியான சூழ்நிலைகளில் விரைவான பணியை  உறுதி செய்வதற்கும் அரசின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. இந்த மையம் தரைவழி மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் மூலம் இடர்ப்பாடுகளைக் கண்காணிப்பதற்கான நவீன உபகரணங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. மேலும், தேடல் மற்றும் மீட்பு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்தியக் கடலோரக்  காவல்படையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள், மீட்பு விமானம், கப்பல்கள் மற்றும் பிற வசதிகளுடன்,   நிகழ்நேர எச்சரிக்கை நிர்வாகத்திற்காக மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடலோர நாடுகளை ஒட்டியுள்ள நீரில், கடல் மாசுபாட்டிற்கு எதிரான, குறிப்பாக எண்ணெய் மற்றும் ரசாயன மாசுபாட்டிற்கு எதிரான, நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முதல் வகையான வசதி இதுவாகும். 2022, நவம்பர் 22  அன்று கம்போடியாவில் நடைபெற்ற முதல் இந்தோ-ஆசியான் கூட்டத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த மையத்தின் உருவாக்கத்தை முதலில் அறிவித்தார்.

சென்னைத் துறைமுக வளாகத்தில் கிழக்குக் கடலோரக் காவல்படை மண்டலத் தலைமையகத்தால் இந்த மையம் அமைக்கப்பட்டது. இது ஒரு அவசரகால தகவல் மையத்தைக் கொண்டுள்ளது. கடல் எண்ணெய் மாசுபாடு சம்பவங்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் கடலோரக் காவல்படை பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் முகமைகள், அரசு நிறுவனங்கள், தனியார் பங்கேற்பாளர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு மாசு தடுப்பு தொழில்நுட்பங்களில் இது பயிற்சி அளிக்கும். கடலில் எண்ணெய் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் நட்பு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் இது பயிற்சி அளிக்கும்.

கடலோர காவல்படையின் விமானங்கள் நிறுத்துமிடம்

இந்த வசதி இந்தியக் கடலோரக் காவல்படையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்பதுடன், புதுச்சேரியிலும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் கடல்சார் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். விமானங்கள் நிறுத்துமிடத்தில் சேத்தக் மற்றும் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் படையணிகள் இருக்கும்  இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இவை கடல் ரோந்து, தேடுதல், மீட்பு மற்றும் இதுபோன்ற பிற பணிகளை நிலத்திலிருந்தும், கடலில் ரோந்து செல்லும் கடலோரக் காவல்படை கப்பல்களிலிருந்தும் மேற்கொள்ளும் திறன் கொண்டவை.

பாதுகாப்பு அமைச்சகம், இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரமுகர்கள், நட்பு நாடுகளின் விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*****

SMB / KV

 

 


(Release ID: 2046449) Visitor Counter : 82