விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறை தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள் எதிர்கால தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளன: விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 17 AUG 2024 7:02PM by PIB Chennai

விண்வெளித் துறை தொடர்பாக 2024-25 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எதிர்காலத்துக்கான தொலைநோக்குப் பார்வை கொண்டவை என்று மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

'ஓபன்' இதழின் ஆசிரியர் ராஜீவ் தேஷ்பாண்டேவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், விண்வெளித் துறையை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த காலத்தின் தடைகள் உடைக்கப்பட்டதாகவும், இதற்கான பெருமை பிரதமர் திரு நரேந்திர மோடியையே சாரும் என்றும் கூறினார்.

புதிய விண்வெளிக் கொள்கை ஒரு திருப்புமுனை தருணம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். முதன்முறையாக, இஸ்ரோவின் நடவடிக்கைகளில் தனியார் துறை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

 2021-ம் ஆண்டில், விண்வெளித் துறையில் ஒரு இலக்க புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன என்றும் இப்போது அது 300- தொட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்அக்னிகுல் காஸ்மோஸ் என்ற புத்தொழில் நிறுவனம் இஸ்ரோ வளாகத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது என்று அவர் கூறினார். ஸ்கைரூட் நிறுவனம் முதல் தனியார் துணை சுற்றுப்பாதை ஏவுதலை மேற்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஸ்பேஸ் எக்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை அணுகி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

 2023-ஆம் ஆண்டில், விண்வெளித்துறையில் ரூ.1000 கோடி முதலீடு பெறப்பட்டது என அவர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் ஐந்து மடங்கு அல்லது சுமார் 44 பில்லியன் டாலர் என்ற அளவில் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

விண்வெளித் துறையில்  வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கக்கூடிய திறமைசாலிகளுக்கு இங்கேயே வாய்ப்புகள் கிடைக்கக் கூடும் என்றும் அவர் கூறினார். தற்போது வேலைவாய்ப்புக்கான வழிகள் மட்டுமின்றி, புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான  வாய்ப்புகளும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அடுத்து வரவிருக்கும் முக்கியமான இஸ்ரோ திட்டமாக "ககன்யான்" உள்ளது எனவும் கோவிட் காரணமாக தாமதமான இந்த திட்டம் அடுத்த ஆண்டு நிறைவேறும் என்றும் கூறினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றால், 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு இந்திய நபரை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தியாவின் விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் முதல் இந்தியர் தரையிறங்கும் பெருமை கிடைக்கும் எனவும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

*****

PLM / KV

 


(Release ID: 2046335) Visitor Counter : 59