விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகள் முடிவெடுக்க ஆதரவான டிஜிட்டல் தளத்தை மத்திய இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி தொடங்கி வைத்தார்

Posted On: 16 AUG 2024 5:16PM by PIB Chennai

இந்தியாவில் வேளாண் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், மேம்பாட்டையும் உருவாக்குவதற்கு விண்வெளி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பது குறித்த கருத்தரங்கு இன்று புதுதில்லியில் நடைபெற்றது. வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில், இந்தத் துறைக்கான இணையமைச்சர்  திரு பகீரத் சவுத்ரி, விவசாயிகள் முடிவெடுக்க ஆதரவான புவி-விண்வெளி சார்ந்த டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்வுக்கு துறையின் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி முன்னிலை வகித்தார்.

விவசாயிகள் முடிவெடுக்க ஆதரவான புவி-விண்வெளி சார்ந்த டிஜிட்டல் தளம் என்பது இந்த வகையில் முதலாவதாகும்.  செயற்கைக்கோள் படங்கள், வானிலை பற்றிய தகவல், நீர்நிலைகளில்  தண்ணீர் இருப்பு, நிலத்தடி நீர் மட்டம், மண்வளம் பற்றிய தகவல் போன்றவற்றை எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும்  விவசாயிகள் எளிதாக பெறுவதற்கு இது உதவும்.

மேலும் சாகுபடி பயிர்கள் பற்றிய விவரங்களும் கண்காணிப்பையும் கூட இந்த தளத்தில் இருந்து பெற முடியும் என்பதால், பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் தரும். ஒரே நாடு, ஒரே மண் தகவல் என்ற நடைமுறை மூலம் மண்ணின் தன்மை, மண் வளம் போன்றவற்றை விரைந்து பெற முடியும் என்பதால், மண்ணுக்கு ஏற்ற பயிர்கள் சாகுபடி என்பதோடு, நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமலாக்கவும் உதவியாக இருக்கும். வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்த மதிப்பீடு முதல், பயிர் பாதுகாப்பு தீர்வுகள் வரையிலான தகவல்களுக்கும் இந்தத் தளம்  பயனுடையதாக இருக்கும்.

இந்தக் கருத்தரங்கில் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, விண்வெளித்துறை, இஸ்ரோ மையங்கள், இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு மத்திய முகமைகள், மாநில தொலையுணர்வு மையங்கள், மாநில வேளாண் துறை, நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் அலுவலர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுகளை பெறுவது உள்ளிட்ட இஸ்ரோவின் பல்வேறு தளங்கள் குறித்த விளக்க நிகழ்வுகளும், தொழில்நுட்ப அமர்வுகளும் இந்தக் கருத்தரங்கில் இடம்பெற்றன. இந்திய வேளாண் துறையின் சவால்களை எதிர்கொள்ளவும், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விண்வெளி தொழில்நுட்பத்தின் தேவை குறித்து கொள்கை வகுப்பவர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறை தலைவர்கள், ஆய்வாளர்கள் வலுவாக எடுத்துரைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045987

***

SMB/RS/DL



(Release ID: 2046085) Visitor Counter : 15