குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதைகளுக்கு இடமளிக்கும் வகையில், நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசியல் சாசனப்பதவியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்திடம் கேட்பது மிகவும் கவலை அளிக்கத்தக்கது: குடியரசு துணைத்தலைவர் வருத்தம்

Posted On: 16 AUG 2024 2:45PM by PIB Chennai

நமது  பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதை களுக்கு இடமளிக்கும் வகையில், நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என, அரசியல் சாசனப்பதவியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்திடம் கேட்பது மிகவும் கவலை அளிக்கத்தக்கது என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

தில்லி  தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமை சட்டம் மற்றும் மேலாண்மையில் முதுநிலை பட்டம் பெற்ற முதலாவது அணியினரிடையே உரையாற்றிய திரு தன்கர், சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை  என எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், அதற்கான செயல்பாட்டு வரம்பு இந்திய அரசியல் சாசனத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றார். நீதிமன்றங்களுக்கான அதிகாரமும், வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உலகில் எந்த நாடாக இருந்தாலும், அது அமெரிக்க உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தில் உள்ள உச்சநீதிமன்றம், அல்லது வேறு எந்த வடிவிலானதாக இருந்தாலும் அங்கெல்லாம் தாமாக முன்வந்து வழக்குகளை  எடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அம்சங்களைத் தாண்டி யாருக்கும் தீர்வு கிடைத்ததில்லை. விசாரணை நீதிமன்ற வரம்பு, மேல்முறையீட்டு நீதிமன்ற வரம்பு போன்றவற்றிற்கு அரசியல் சாசனத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கும் அதில் இடம் உள்ளது என்றும் திரு ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார். ஆனால் நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதை பற்றி தாமாக முன்வந்து விசாரிக்குமாறு, அரசியல் சாசனப் பொறுப்பில் உள்ள ஒருவர் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்து தாம் மிகவும் கவலையடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

தேச நலனை விட சுயநலன் அல்லது பிரிவினைக்கு முன்னுரிமை அளிக்கும் சக்திகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  இளைஞர்கள் குடிமைப்பணி மோகத்தை கைவிட்டு, வழக்கமான வேலைவாய்ப்புகளைத் தாண்டி புதிய மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்புகளை நாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா, தனது செழுமையான கலாச்சாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியம் காரணமாக அறிவுசார் சொத்துரிமை மிகுந்த தங்கச் சுரங்கம் போன்ற ஒரு நாடாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச வர்த்தகத்தில், அறிவுசார் சொத்துரிமை ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது எனவும் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

நமது பண்டைக்கால வேதங்களில் காணப்படும் ஞானம், அறிவுசார் சொத்துரிமையின் சாராம்சமாக இருப்பதுடன்,  சமுதாய மேம்பாட்டிற்குத் தேவையான கருத்துக்கள் மற்றும் அறிவாற்றல் மிகுந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045911

***

MM/AG/RR


(Release ID: 2045934) Visitor Counter : 53