சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார், 17-வது திவ்ய கலா மேளாவை, ராய்பூரில் 17.08.2024 அன்று தொடங்கிவைக்கிறார்

Posted On: 16 AUG 2024 11:14AM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார், 17-வது திவ்ய கலா மேளாவை, ராய்பூரில் நாளை (17.08.2024) தொடங்கிவைக்கிறார். ஒருவார காலம் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி, மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் நோக்கிலும், அவர்களது திறமை மற்றும் படைப்பாற்றலை போற்றும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரால் தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான பொருட்கள் இந்த திவ்ய கலா மேளாவில் இடம் பெறவுள்ளன. வீட்டு அலங்காரப் பொருட்கள், வாழ்க்கை முறை சார்ந்த பொருட்கள், ஆடைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பொருட்கள், பெட்டியில் அடைக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட ஈடுஇணையற்ற தயாரிப்புகள் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியை கண்டுகளிப்பதோடு,  செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் படைப்பாற்றலை காண்பதுடன், இவற்றில் இருந்து ஒரு கைவினைப்பொருளை வாங்கும்  அரிய வாய்ப்பையும் பெறுவார்கள்.

இந்த மேளா ஒரு சந்தை இடமாக மட்டுமின்றி ‘திவ்ய கலா சக்தி’ எனப்படும் வேலைவாய்ப்பு மற்றும் கடன் மேளா வாயிலாக ஒரே இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதாக உள்ளது.  இந்த கடன் மேளா வாயிலாக கண்காட்சியில் பங்கேற்கும் கைவினைஞர்கள் நிதியுதவி பெற்று தங்களது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்வதோடு தற்சார்பு அடையவும் வழிவகுக்கும்.

அத்துடன் மாற்றுத்திறனாளி கலைஞர்களின் திறமையை போற்றுவதாக அமையும் இக்கண்காட்சியில், கைவினைஞர்களின் இசை, நாட்டியம் மற்றும் நாடகம் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2022 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வரும் தொடர் நிகழ்ச்சிகளின் 17-வது நிகழ்ச்சியாக ராய்பூரில் இந்த திவ்ய கலா மேளா நடைபெறவுள்ளது. இதற்கு முன்பு தில்லி, மும்பை, போபால், குவஹாத்தி போன்ற பெருநகரில் நடைபெற்ற கண்காட்சிகளுக்கு பரவலான வரவேற்பு கிடைத்ததுடன் ஒவ்வொரு கண்காட்சியும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து அவர்களை மேம்படுத்த வாய்ப்பளித்தன.

***

(Release ID: 2045817)

MM/AG/RR



(Release ID: 2045868) Visitor Counter : 50