சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் சுகாதார கல்வியை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் - தேசிய சுகாதார ஆணையமும் மகாராஷ்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டன

Posted On: 13 AUG 2024 4:50PM by PIB Chennai

இந்தியா முழுவதும் டிஜிட்டல் சுகாதாரக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய சுகாதார ஆணையமும் (NHA) மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் (MUHS) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று (13-08-2024) கையெழுத்தானது.

 

இதன்படி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு செல்லும் நோக்கில் டிஜிட்டல் அடித்தள படிப்பை மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தும்.  தேசிய சுகாதார ஆணையமும்  மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து டிஜிட்டல் சுகாதார செயல்பாடுகளை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் டிஜிட்டல் சுகாதாரத்தில் மேலும் பல படிப்புகளை உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்மொழிகிறது.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, "தேசிய சுகாதார ஆணையம் - மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் இடையேயான கூட்டு செயல்பாடு, டிஜிட்டல் சுகாதாரக் கல்வியை மருத்துவ பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதிலும், பயனுள்ள சுகாதார அமைப்புக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைந்துள்ளது என்று கூறினார். இந்த ஒத்துழைப்பு மருத்துவ மாணவர்கள், மருத்துவ நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் பரந்த செயல்பாட்டுக்கும் துணையாக அமையும் என்று அவர் தெரிவித்தார். இதனால் கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார வசதிகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

 

நமது சுகாதாரப் பணியாளர்கள் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்த திறன் மேம்பாடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு வழி வகுப்பது மட்டுமல்லாமல், நாட்டில் டிஜிட்டல் கற்பித்தல் சூழலுக்கும் பங்களிக்கும் என்று அமைச்சர் திரு ஜேபி நட்டா தெரிவித்தார்.

 

தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) தலைமைச் செயல் அதிகாரி திருமதி தீப்தி கவுர் முகர்ஜி, மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாதுரி கனிட்கர், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

*****************

(Release ID: 2044857)



(Release ID: 2044878) Visitor Counter : 68