தேர்தல் ஆணையம்
ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வு நடத்தினர்
Posted On:
13 AUG 2024 1:24PM by PIB Chennai
ஹரியானாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், டாக்டர் எஸ்.எஸ். சந்து ஆகியோருடன் சண்டிகரில் விரிவான ஆய்வு நடத்தினார். ஹரியானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024, நவம்பர் 3 அன்று முடிவடைய உள்ளது. மாநிலத்தில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் (73 பொது; 17 எஸ்சி) தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் குழுவின் இரண்டு நாள் ஆய்வுப் பயணத்தின்போது, ஆம் ஆத்மி, பிஜேபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஜன்நாயக் ஜனதா கட்சி ஆகிய தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆணையர்களை சந்தித்தனர்.
அரசியல் கட்சிகள் எழுப்பிய முக்கிய பிரச்சினைகள் பின்வருமாறு:
1. அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துதல்.
2. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போதிய மத்திய படைகளை நியமித்தல்.
3. பஞ்ச்குலாவில் இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை நீக்குவதன் மூலம் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் சில கட்சிகள் எடுத்துரைத்தன.
4. வாக்குச்சாவடிகளுக்கு இடையிலான தொலைவைக் குறைக்குமாறும், முதியோர் மற்றும் பெண் வாக்காளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
5. நகர்ப்புறங்களில் வாக்குச்சாவடி நுழைவாயிலில் இருந்து, 200 மீட்டரில் இருந்து 50 மீட்டராக கட்சிகளின் வாக்குச்சாவடி மேசைகளின் இருப்பிடத்தை மாற்ற வேண்டும் என்று சில கட்சிகள் வாதிட்டன.
6. தேர்தல் பார்வையாளர்கள் உரிய நேரத்தில் குறைகளை நிவர்த்தி செய்ய இயலாமை குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.
7. வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே வேட்பாளர்களுடன் வாக்காளர் பட்டியல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மற்ற கோரிக்கைகளில் அடங்கும்.
8. வாக்குச்சாவடி குழுக்கள் வீட்டில் வாக்களிக்கும் வாக்காளர்களை அணுகும் போது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்தல்.
9. சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் விவகாரங்களை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மாநிலத்தில் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது என்றும், ஆணையர்கள் கட்சி பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தனர். தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதற்காக நடந்து வரும் இரண்டாவது சிறப்பு சுருக்க திருத்த செயல்முறையில் தீவிரமாக ஈடுபட அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கப்பட்டன.
ஹரியானாவில் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% அளவிற்கு குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளில் வசதியாக இருந்து வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். வீட்டில் வாக்களிக்கும் வசதி விருப்பமானது. வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு நேரில் செல்ல விரும்பினால், வாக்குச்சாவடியில் தேவையான உதவிகள் வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் 12டி இந்த வசதியைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களிடமிருந்து தேர்தல் அறிவிக்கை செய்யப்பட்ட 5 நாட்களுக்குள் வாக்குச்சாவடி அதிகாரியால் விநியோகிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. மேலும் அதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அனைத்து செயல்முறை ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை, உபகரணங்கள், போக்குவரத்து வாக்குச்சாவடி சீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு, தேர்தல் ஊழியர்களுக்கு பயிற்சி, பறிமுதல், சட்டம் ஒழுங்கு, வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் திட்டமிடல் மற்றும் நடத்தையின் ஒவ்வொரு அம்சம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், கோட்ட ஆணையர்கள் / ஐ.ஜி.க்களுடன் ஆணையர்கள் விரிவான ஆய்வு நடத்தினார்கள்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் விரிவான ஆய்வுக்கு முன்பு, ஹரியானா தலைமை நிர்வாக அதிகாரி தேர்தல் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிய ஒரு விளக்கத்தை அளித்தார். இதில் 2024, ஜூலை 1 தகுதி நாளாக கொண்டு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் 2-வது சிறப்பு சுருக்க திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். இறுதி வாக்காளர் பட்டியல் 2024, ஆகஸ்ட் 27 அன்று வெளியிடப்படும். இதன் நகல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044791
******
IR/RS/RR
(Release ID: 2044805)
Visitor Counter : 58