சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.1,000 கோடி வட்டியை சேமித்துள்ளது
Posted On:
06 AUG 2024 3:05PM by PIB Chennai
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தனது ஒட்டுமொத்த கடன் பொறுப்பைக் குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக, ரூ.15,700 கோடி வங்கிக் கடனை வெற்றிகரமாக முன்கூட்டியே செலுத்தியதன் மூலம் குறிப்பிடத்தக்க நிதி மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தக் கடனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்தியதால் ரூ.1,000 கோடி அளவிற்கு வட்டி சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்கூட்டியே திருப்பிச் செலுத்துதல் மூலம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நிலுவைக் கடன் பொறுப்பு ரூ.3,20,000 கோடியாக குறைந்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, அடிப்படை கட்டமைப்பு, முதலீட்டு அறக்கட்டளை (இன்விட்) வழியாக நிதி திரட்டுதல் மூலம் கிடைக்கும் தொகை சிறப்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. 2023-24 நிதியாண்டில் இன்விட் மூலம் ரூ.15,700 கோடி ஈட்டப்பட்டது. 2024 - 25 நிதியாண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்விட் மூலம் ரூ.15,000 கோடி முதல் 20,000 கோடி வரையிலான மதிப்புள்ள திட்டங்கள் மூலம் நிதி திரட்ட விரும்புகிறது. இதனால் இந்த ஆணையத்தின் ஒட்டுமொத்த கடன் பொறுப்பு 2025 நிதியாண்டின் இறுதியில் ரூ.3,00,000 கோடி வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்களைக் குறைக்க கடன் வழங்கிய வங்கிகளுடன் ஆணையம் தீவிரமாக முயற்சி செய்தது. இதன் விளைவாக, வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை 8.00-8.10%லிருந்து 7.58-7.59% வரை குறைத்துள்ளன. இந்த நடைமுறையில், ரூ.15,700 கோடி வங்கிக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ.1,000 கோடி வட்டி சேமிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
***
SMB/RR/KR/DL
(Release ID: 2042231)
Visitor Counter : 65